டில்லியில் பட்டாசு வெடிக்க ஒட்டுமொத்தமாக தடை விதித்தது சரியல்ல: சுப்ரீம் கோர்ட்
டில்லியில் பட்டாசு வெடிக்க ஒட்டுமொத்தமாக தடை விதித்தது சரியல்ல: சுப்ரீம் கோர்ட்
ADDED : அக் 10, 2025 10:56 PM
புதுடில்லி:''டில்லியில் பட்டாசுகளை வெடிக்க ஒட்டுமொத்தமாக தடை விதிக்கப்பட்டுள்ளதை செயல்படுத்துவதில் சிக்கல் உள்ளது. அது சிறப்பான முடிவல்ல,'' என தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், தன் உத்தரவை நிறுத்தி வைத்துள்ளது.
கடந்த 2018 முதல், தலைநகர் டில்லி மற்றும் சுற்றுப்புறங்களில் பட்டாசுகளை வெடிக்க ஒட்டுமொத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி இந்த தடையை விலக்கக் கோரி, மத்திய அரசு, டில்லி மாநில அரசு, பட்டாசு தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மொத்தமாக அந்த மனுக்களை விசாரித்த, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான நீதிபதி கே.வினோத் சந்திரன் உள்ளடக்கிய அமர்வு முன், மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடினார்.
அவரிடம், '2018 முதல், டில்லி மற்றும் சுற்றுப்புறங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், காற்று மாசு குறைந்துள்ளதா' என நீதிபதிகள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்து, துஷார் மேத்தா கூறிய தாவது:
டில்லியில் ஒட்டுமொத்த வாகன போக்குவரத்து, தொழிற்சாலைகள் மூடல் போன்றவை நிலவிய, கொரோனா காலத்தில் மட்டுமே காற்று மாசு சற்று குறைந்திருந்தது. ஆனால், இப்போதும் அதே நிலையில், அதாவது, மிகவும் மோசமான நிலையில் தான் உள்ளது.
ஒட்டுமொத்தமாக தடை விதிக்கப்பட்டுள்ளதால், அதை செயல்படுத்துவதில் பல சிரமங்கள் உள்ளன. தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில், ஒன்றிரண்டு நாட்கள் குழந்தைகளை மகிழ்ச்சியாக பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இறுதி முடிவு இதையடுத்து, நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவில், 'ஒட்டுமொத்தமாக, பட்டாசுகளை வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், அதை செயல்படுத்துவதில் சில சிக்கல்கள் உள்ளன. மேலும், அது சிறப்பான முடிவல்ல. எனவே, நடுநிலைமையுடன் உத்தரவு பிறப்பிக்க வேண்டியது அவசியம்' என்றனர்.
பின், இறுதி முடிவை, பின் அறிவிப்பதாக உத்தரவிட்டனர்.
உச்ச நீதிமன்றம் கடந்த, செப்டம்பர் 26ம் தேதி பிறப்பித்த உத்தரவில், 'சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பசுமை பட்டாசுகளை அனுமதிக்கப்பட்ட உற்பத்தியாளர்கள் தயாரித்துக் கொள்ளலாம். எனினும், தங்களின் அனுமதியின்றி, டில்லி மற்றும் சுற்றுப்புறங்களில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது' என்றது.
டில்லியில் உள்ள உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஒட்டுமொத்த தடையால், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட, 16 மாநிலங்களில் பல பகுதிகளில், பட்டாசுகள் வெடிக்க தடை நிலவுகிறது.