சதானந்தன் மாஸ்டரை அமைச்சராக்குங்க பதவி விலக சுரேஷ் கோபி விருப்பம்
சதானந்தன் மாஸ்டரை அமைச்சராக்குங்க பதவி விலக சுரேஷ் கோபி விருப்பம்
ADDED : அக் 12, 2025 11:50 PM

கண்ணுார்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ள நடிகர் சுரேஷ் கோபி, பா.ஜ., சார்பில் கேரளாவில் இருந்து புதிதாக ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ள சதானந்தன் மாஸ்டரை, அமைச்சராக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கண்ணுாரில் பா.ஜ., நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது.
இதில், மத்திய பெட்ரோலியம் மற்றும் சுற்றுலா துறை இணை அமைச்சரும், மலையாள நடிகருமான சுரேஷ் கோபி, ராஜ்யசபா எம்.பி., சதானந்தன் மாஸ்டர் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் சுரேஷ் கோபி பேசியதாவது:
பா.ஜ., சார்பில் ராஜ்யசபாவுக்கு, மூத்த தலைவர் சதானந்தன் தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, சதானந்தனை அப்பதவியில் நியமிக்க வேண்டும். இது, கேரள அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும்.
சதானந்தனின் எம்.பி., அலுவலகம் விரைவில், அமைச்சர் அலுவலகமாக தரம் உயர பிரார்த்திக்கிறேன். 2016ல் தான், நான் பா.ஜ.,வில் இணைந்தேன். நான் பா.ஜ.,வின் இளம் உறுப்பினர்களில் ஒருவன். கேரள மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்று, கட்சி என்னை மத்திய அமைச்சராக்கியது. என் சினிமா வாழ்க்கையை விட்டு விட்டு ஒருபோதும் மத்திய அமைச்சராக விரும்பியதில்லை. சமீபகாலமாக என் வருமானம் வெகுவாக குறைந்து உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிதாக ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வாகியுள்ள கண்ணுார் மாவட்ட பா.ஜ., மூத்த தலைவரான சதானந்தன், 1994ல் ஏற்பட்ட அரசியல் வன்முறையின்போது மார்க்சிஸ்ட் கம்யூ., தொண்டர்களால் தாக்கப்பட்டு தன் இரு கால்களையும் இழந்தவர்.