ஆஸி கிரிக்கெட் வீராங்கனைகளிடம் அத்துமீறல்: சந்தேக நபர் கைது
ஆஸி கிரிக்கெட் வீராங்கனைகளிடம் அத்துமீறல்: சந்தேக நபர் கைது
ADDED : அக் 25, 2025 06:56 PM

இந்துார்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள் இருவரிடம் அத்துமீறிய சம்பவம் தொடர்பாக, இந்துாரில் சந்தேக நபர் ஓருவரை போலீசார் கைது செய்தனர்.
ஐசிசி மகளிர் உலகப்கோப்பையில் விளையாடுவதற்கு ஆஸ்திரேலியா அணி இந்தியா வந்துள்ளது. மத்திய பிரதேசத்தின் இந்துாரில் ஆஸ்திரேலிய மகளிர் அணி வீராங்கனைகள், ரேடிசன் ப்ளூ ஹோட்டலில் தங்கியிருந்தனர். வீராங்கணைகள் இருவர் நடந்து செல்லும்போது கஜ்ரானா சாலை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் அவர்களைப் பின்தொடர்ந்து அவர்களை தகாத முறையில் தொட்டுவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
சம்பவம் நடந்தவுடன் மகளிர் கிரிக்கெட் வீரர்கள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். தகவல் கிடைத்ததும் பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
ஆஸ்திரேலிய அணியின் பாதுகாப்பு மேலாளர் டேனி சிம்மன்ஸ் நேற்று முன்தினம் மாலை(அக்டோபர் 23) காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து, போலீசார் எப்ஐஆர் பதிவு செய்து, சம்பவத்தின் போது சந்தேகத்திற்கிடமாக பைக்கில் சுற்றிக்கொண்டிருந்த அகீல் கானை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி கூறியதாவது: சந்தேக நபரின் மோட்டார் சைக்கிள் எண்ணை அருகில் இருந்த ஒருவர் குறிப்பிட்டு கூறினார், அதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட அகீல் கான் கைது செய்தோம். அவன் மீது ஏற்கனவே குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு போலீஸ் அதிகாரி கூறினார்.

