ADDED : பிப் 08, 2025 06:21 AM
மைசூரு: மைசூரு டி.நரசிப்பூரில் 13வது ஆண்டு கும்பமேளா ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கின்றன.
தெற்கு காசி என்று அழைக்கப்படும் மைசூரின் டி.நரசிப்பூரில் காவிரி, கபினி, சரோவா ஆறுகள் சங்கமிக்கும் இடமான திரிவேணி சங்கமத்தில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்ப மேளா நடத்தப்படுவது வழக்கம்.
வரும் 10, 11, 12ம் தேதிகளில் மூன்று நாட்கள் கும்பமேளா நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மைசூரு மாவட்ட நிர்வாகம், கும்பமேளா கொண்டாட்ட குழு, திரிவேணி சங்கம் ஆகியவை இணைந்து மும்முரமாக செய்து வருகின்றன.
வரும் 10ம் தேதி காலை 10:30 மணிக்கு அகஸ்தியேஸ்வர சுவாமி முன்னிலையில் கும்பமேளா துவக்க விழா மற்றும் கொடியேற்றம் நடக்கிறது. மத்திய கனரக தொழில் அமைச்சர் குமாரசாமி, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக், அமைச்சர்கள் மஹாதேவப்பா, வெங்கடேஷ், ராமலிங்கரெட்டி, எம்.பி.,க்கள் யதுவீர், சுனில் போஸ் கலந்து கொள்கின்றனர்.
வரும் 11, 12ம் தேதிகளில் சித்தராமையா தலைமையில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மைசூரில் இருந்து டி.நரசிப்பூருக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன. கும்பமேளாவுக்காக அரசு 6 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.