அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜின் 'சஸ்பெண்ட்' உத்தரவு ரத்து: கவர்னர் ரவி அதிரடி
அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜின் 'சஸ்பெண்ட்' உத்தரவு ரத்து: கவர்னர் ரவி அதிரடி
ADDED : செப் 08, 2025 08:34 PM

சென்னை : அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜின், 'சஸ்பெண்ட்' உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலையின் துணை வேந்தராக, 2021 ஆகஸ்ட்டில், பேராசிரியர் வேல்ராஜ் நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம், கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் நிறைவடைந்தது. எனினும், அவர் ஓய்வு பெறும் வயதை எட்டாததால், பல்கலையில் ஆற்றல், ஆராய்ச்சி துறையில், தொடர்ந்து பேராசிரியராக பணியாற்றி வந்தார்.
கடந்த ஜூலை 31ம் தேதி, அவர் ஓய்வு பெற இருந்த நிலையில், பல்கலை சிண்டிகேட் குழுவின் ஒப்புதலின்படி, திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டார். துணை வேந்தராக இருந்த போது, ஒரே பேராசிரியர், பல்வேறு கல்லுாரிகளில் பணிபுரிந்த விவகாரம் தொடர்பான புகாரில், அதை கண்காணிக்க தவறியதாக, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து, பல்கலை வேந்தரான கவர்னர் ரவியிடம் வேல்ராஜ் மேல்முறையீடு செய்தார். தன் மீதான புகாரில், எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை என்றும், தான் மேற்கொண்ட நிர்வாக ரீதியிலான நடவடிக்கைகள் அனைத்தும், சிண்டிகேட் குழு ஒப்புதலுடன் நடந்தவை என்றும் கூறி, அதற்கான ஆவணங்களை கவர்னரிடம் சமர்ப்பித்தார்.
இதுகுறித்து கவர்னர் விசாரித்தார். 'அனைத்து கல்லுாரிகளிலும் பணியாற்றிய பேராசிரியர்களின் விபரங்களை, பல்கலை இணையதளத்தில் வேல்ராஜ் வெளியிட்டதாலேயே, ஒரே பேராசிரியர் பல கல்லுாரிகளில் பணியாற்றியது போன்ற பதிவுகள் கண்டறியப்பட்டன. எனவே, வேல்ராஜ் மீதான புகாரின் மீது நடவடிக்கை எடுக்க எந்தவித முகாந்திரமும் இல்லை' எனக்கூறி, அவர் மீதான சஸ்பெண்ட் உத்தரவை, கவர்னர் ரவி ரத்து செய்துள்ளார். மேலும், அவர் ஓய்வு பெற அனுமதி அளித்தும், அவருக்கான ஓய்வு கால பணப்பலன்களை வழங்கவும், கவர்னர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.