'குட்டு' வைத்தது கட்சித்தலைமை; கண்டபடி பேசிய கங்கனா; கருத்தை வாபஸ் வாங்கினார்!
'குட்டு' வைத்தது கட்சித்தலைமை; கண்டபடி பேசிய கங்கனா; கருத்தை வாபஸ் வாங்கினார்!
UPDATED : செப் 25, 2024 12:48 PM
ADDED : செப் 25, 2024 12:39 PM

புதுடில்லி: வேளாண் சட்டங்கள் குறித்து தாம் தெரிவித்த கருத்தை வாபஸ் பெறுவதாக பா.ஜ., எம்.பி.,யும் பிரபல நடிகையுமான கங்கனா ரனாவத் அறிவித்துள்ளார்.
சர்ச்சை கருத்து
ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள மண்டி தொகுதி எம்.பி.யாக இருப்பவர் கங்கனா ரனாவத். நடிகையான இவர் பா.ஜ.வைச் சேர்ந்தவர். அவ்வப்போது ஏதேனும் கருத்துகளை கூறி சர்ச்சையில் சிக்கி பேசி பா.ஜ., மேலிடத்திடமே குட்டு வாங்கியவர்.
வேளாண் சட்டங்கள்
இப்போது நிருபர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய கங்கனா, நாட்டின் வளர்ச்கிக்கு முக்கிய பங்காக உள்ள விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகள் நலன்களை கருதி, ரத்து செய்யப்பட்ட 3 வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று கூறியிருந்தார்.
அதிகாரம் இல்லை
கங்கனாவின் பேச்சு எப்போது பா.ஜ.,வுக்கு எதிராக அரசியல் செய்யலாம் என்று காத்திருக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு வாயில் அவல் கிடைத்தது போலாகிவிட்டது. இஷ்டத்துக்கு அறிக்கை வெளியிட்டு பரபரப்பை கிளப்ப, ஒரு கட்டத்தில் பா.ஜ., சார்பில் இது போன்ற பேச அவருக்கு அதிகாரம் இல்லை. அவரின் கருத்து கண்டிக்கத்தக்கது என்று பா.ஜ., செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா தெரிவித்து இருந்தார்.
வாபஸ்
இந்நிலையில் தாம் பேசிய கருத்துகளை வாபஸ் வாங்குவதாக கங்கனா ரனாவத் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறி இருப்பதாவது; எனது கருத்து யாருக்கேனும் வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் கூறிய எனது கருத்துகளை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.
அறிவுறுத்தல்
எப்போது பார்த்தாலும் ஏதாவது சர்ச்சை கருத்தை கூறி கட்சிக்கு நெருக்கடியை அளித்து வருகிறார் கங்கனா ரனாவத். கடந்த மாதமும் இதேபோன்று அவருக்கு எச்சரிக்கை விடுத்தது கட்சித்தலைமை. இனியாவது தனது இருப்பை அறிந்து, தெரிந்து கருத்துகளை பொதுதளத்தில் வெளியிட வேண்டும் என்று பா.ஜ.,வினர் தெரிவித்துள்ளனர்.