UPDATED : ஏப் 29, 2025 12:58 AM
ADDED : ஏப் 29, 2025 12:55 AM

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு, ஆப்கானிஸ்தானை நிர்வகித்து வரும் தலிபான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், நம் அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சமீபத்தில் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கும், அதன் அண்டை நாடான ஆப்கானிஸ்தானுக்கும் இடையே மோதல் உள்ளது. ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகள், பாகிஸ்தான் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
கடந்த, 2021ல் அமெரிக்கப் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பின், ஆப்கானிஸ்தான் நிர்வாகத்தை, தலிபான் பயங்கரவாத அமைப்பு ஏற்றது. தற்போது, தலிபான் அமைப்பே நிர்வாகத்தை கவனித்து வருகிறது.
பஹல்காம் தாக்குதலுக்கு, தலிபான் அரசு ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளது. பிராந்தியத்தில் நிலவும் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டது.
இந்நிலையில், நம் வெளியுறவு அமைச்சகத்தில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் விவகாரங்களுக்கான பிரிவின் இணைச் செயலர் ஆனந்த் பிரகாஷ், தலிபான் அரசின் பொறுப்பு வெளியுறவு அமைச்சர் மவுலவி ஆமிர் கான் மட்டாகியை சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது, பஹல்காம் தாக்குதலுக்கு அவர் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளார். இது தவிர, இரு தரப்பு உறவுகள் உள்ளிட்டவை குறித்தும் இருவரும் விவாதித்தனர்.

