இந்தியா உடனான உறவு வலுவடையும் தலிபான் வெளியுறவு அமைச்சர் நம்பிக்கை
இந்தியா உடனான உறவு வலுவடையும் தலிபான் வெளியுறவு அமைச்சர் நம்பிக்கை
ADDED : அக் 12, 2025 12:09 AM

லக்னோ: “இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையே உறவு, எதிர்காலத்தில் மேலும் வலுவடையும். இதுபோன்ற வருகை, வருங்காலங்களில் அதிகரிக்கும்,” என, ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர்கான் முத்தகி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை, 2021ல் தலிபான்கள் அதிரடியாக கைப்பற்றி ஆட்சி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தலிபான் அரசு சார்பில் முதன்முறையாக வெளியுறவு அமைச்சர் அமீர்கான் முத்தகி, ஆறு நாள் அரசுமுறை பயணமாக, கடந்த 9ம் தேதி டில்லி வந்தார்.
நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை நேற்று முன்தினம் சந்தித்து பேசிய அவர், உத்தர பிரதேசத்தின் சாஹரன்பூரில் உள்ள தாருல் உலுாம் தியோபந்த் என்ற மதரசாவுக்கு சாலை மார்க்கமாக நேற்று சென்றார்.
அப்போது அந்த மையத்தின் துணைவேந்தர், ஆப்கன் அமைச்சர் அமீர்கான் முத்தகியை மலர் துாவி வரவேற்றார்.
அங்கு நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “இந்தியாவில் எங்களுக்கு கிடைக்கும் வரவேற்புக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். எங்களின் மற்றொரு குழுவையும், விரைவில் இந்தியாவுக்கு அனுப்ப திட்டமிட்டுஉள்ளோம்.
''இதன் வாயிலாக இருநாடுகள் இடையே உறவு, எதிர்காலத்தில் மேலும் வலுவடையும். இதுபோன்ற வருகை, எதிர்காலத்தில் அடிக்கடி நிகழக்கூடும். இதேபோல் இந்தியாவும், தங்கள் குழுவை ஆப்கனுக்கு அனுப்பும் என்ற நம்பிக்கை உள்ளது,” என்றார்.
இதைத் தொடர்ந்து, அமீர்கான் முத்தகி, உ.பி.,யின் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலுக்கு இன்று சென்று பார்வையிட உள்ளார். அதன்பின் டில்லியில் நாளை நடக்கும் இந்திய வணிக மற்றும் தொழில்துறைத் தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.
உ.பி., மதரசாவுக்கு
சென்றது ஏன்?
தாருல் உலுாம் தியோபந்த் என்ற மதரசா அமைப்புக்கும், தலிபான்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பல மூத்த தலிபான் தலைவர்கள், தியோபந்த்தில் உள்ள மதரசா போல் வடிவமைக்கப்பட்ட தாருல் உலுாம் ஹக்கானியாவில் கல்வி பயின்றனர். இது, பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இயங்கி வருகிறது. இதை நிறுவிய மவுலானா அப்துல் ஹக் என்பவர் பிரிவினைக்கு முன் தியோபந்தில் படித்தவர். அவரது மகன் சமி உல் ஹக், இந்த இயக்கத்தை வடிவமைத்ததில் பெரும் பங்காற்றியவர். இவர், தலிபானின் தந்தை எனவும் போற்றப்படுகிறார்.