பாகிஸ்தானுடன் பேச்சா? வாய்ப்பு இல்லை என்கிறார் அமித்ஷா
பாகிஸ்தானுடன் பேச்சா? வாய்ப்பு இல்லை என்கிறார் அமித்ஷா
ADDED : செப் 07, 2024 03:17 PM

ஜம்மு: ‛‛ காஷ்மீரில் அமைதி நிலவும் வரை பாகிஸ்தானுடன் பேசுவதற்கு வாய்ப்பு கிடையாது'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
காஷ்மீர் சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்முவில் நடந்த கூட்டத்தில் பேசியதாவது: பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. மாநிலத்தில் அமைதி நிலவும் வரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடக்காது. காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியன சேர்ந்து மீண்டும் மாநிலத்தை ஊழல் சகாப்தத்துக்கு கொண்டு செல்ல முயற்சி செய்கின்றன. இங்கு பழைய நடைமுறைகளை கொண்டு வருவோம் என்கின்றனர். சுயாட்சி கொண்டு வருவது குறித்து பேசுகின்றனர். காஷ்மீருக்கு சுயாட்சி வழங்குவது குறித்து எந்த சக்தியாலும் பேச முடியாது.
மாநிலத்தில் சிறப்பு சட்டம் நீக்கப்பட்ட பிறகு தான், லோக்சபா தேர்தலில் அதிக மக்கள் ஓட்டு போட்டனர். இவ்வாறு அமித்ஷா பேசினார்.