புதிய சிறைச்சாலைகள் அமைக்க நில உரிமையாளர்களுடன் பேச்சு
புதிய சிறைச்சாலைகள் அமைக்க நில உரிமையாளர்களுடன் பேச்சு
ADDED : மே 22, 2025 09:20 PM
புதுடில்லி:திஹார் சிறையை இடமாற்றம் செய்ய முடிவு செய்துள்ள அரசு, புதிய சிறைச்சாலை கட்டுவதற்கான இடத்துக்காக, நில உரிமையாளர்களுடன், உள்துறை அதிகாரிகள் பேச்சு துவக்கியுள்ளனர்.
டில்லி முதல்வர் ரேகா குப்தா, சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்து பேசும்போது, டில்லி மாநகரில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், திஹார் சிறை புறநகர் பகுதிக்கு மாற்றப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில், புதிய சிறைச்சாலை வளாகம் அமைக்க தனியார் நில உரிமையாளர்கள், வருவாய் மற்றும் டில்லி மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றுடன் டில்லி உள்துறை அமைச்சக அதிகாரிகள் பேச்சு துவக்கியுள்ளனர்.
மேலும், திஹார் சிறையில் தற்போதுள்ள வசதிகள் மற்றும் நெரிசலைக் குறைப்பது தொடர்பாக உள்துறை அதிகாரிகள் அடுத்த வாரம் ஆய்வு செய்கின்றனர்.
மேலும், புதிய சிறை வளாகம் கட்டி முடிக்கப்படும் வரை, திஹாரில் செய்ய வேண்டிய வசதிகள் குறித்தும் ஆய்வு செய்கின்றனர்.
ஒன்பது மத்தியச் சிறைச் சாலைகளைக் கொண்ட திஹார், நாட்டின் மிகப்பெரிய சிறை வளாகங்களில் ஒன்று. இங்கு, 5,200 கைதிகளை அடைக்க முடியும். ஆனால், தற்போது 12,945 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
நரேலாவில் புதிய உயர் பாதுகாப்பு சிறைச்சாலையை கட்ட டெண்டர் நடைமுறையும் துவக்கப்பட்டுள்ளது. இந்தச் சிறைச்சாலை கட்டட வடிவமைப்பு அந்தமான் தீவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செல்லுலார் சிறைச்சாலையைப் போலவே அமைக்க திட்டமிடப்படுள்ளது.
திஹாரில் நெரிசலைக் குறைக்கவே நரேலா சிறைச்சாலையை 21 மாதங்களில் கட்டி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இங்கு சிறைச்சாலை கட்டி முடித்தவுடன் அதிக ஆபத்து நிறைந்த -300 கைதிகள், திஹாரில் இருந்து நரேலாவுக்கு மாற்றப்படுவர்.
இந்த சிறைச்சலை கட்ட மத்திய அரசு ஏற்கனவே 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. மீதமுள்ள 40 கோடி ரூபாயை டில்லி அரசு வழங்குகிறது.
உயர் பாதுகாப்பு சிறைச்சாலையைத் தவிர, நரேலாவில் கைதிகளை தங்க வைக்க மற்றொரு சிறைச்சாலையும் கட்டப்படுகிறது. ஆனால், அதற்கான திட்டம் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. நரேலாவைத் தவிர, மற்ற இடங்களிலும் சிறை வளாகங்களை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாகத்தான், நில உரிமையாளர்களுடன் பேச்சு துவங்கியுள்ளது.