உலகளாவிய பிரச்னைகள் குறித்து புடினுடன் பேச்சு: பிரதமர் மோடி
உலகளாவிய பிரச்னைகள் குறித்து புடினுடன் பேச்சு: பிரதமர் மோடி
ADDED : டிச 05, 2025 07:39 PM

புதுடில்லி: உலகளாவிய பிரச்னைகள் குறித்து ரஷ்ய அதிபர் புடினுடன் பேசியதாக பிரதமர் மோடி கூறி உள்ளார்.
ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வந்துள்ளார். அவருடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:
அதிபர் புடினுடனான பேச்சில் உலகளாவிய பிரச்னைகள் முக்கியமாக இடம்பெற்றன. அமைதிக்கான இந்தியாவின் வலுவான உறுதிப்பாடு, உக்ரைன் மோதலுக்கு அமைதியான, நீடித்த தீர்வு கண்டறிவதை மீண்டும் வலியுறுத்தினேன்.
பயங்கரவாத அச்சுறுத்தலை கூட்டாக எதிர்த்து போராட வேண்டியதன் அவசியத்தை நாங்கள் இருவரும் வலியுறுத்தினோம். பல்வேறு விஷயங்களில் நெருக்கமாக பணியாற்றவும் ஒப்புக்கொண்டோம்.
நமது கலாசார மற்றும் மக்களின் இணைப்பே இந்தியா-ரஷ்யா இடையேயான நட்பின் முக்கிய பகுதியாகும். ரஷ்யாவில் இரண்டு புதிய இந்திய தூதரகங்கள் திறக்கப்பட்டதாலும், புனித புத்த நினைவுச் சின்னங்கள் சமீபத்திய காலங்களில் ரஷ்யாவிற்குச் சென்றதாலும் இந்த நட்பு வலுப்பெற்றுள்ளது. கல்வி, திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி போன்ற துறைகளிலும் மகத்தான ஆற்றல் உள்ளது.
இன்றைய 23வது உச்சி மாநாடு இருநாடுகளின் பல்வேறு அம்சங்களை விரிவாக விவாதிக்க வாய்ப்பாக அமைந்தது. வர்த்தகம் மற்றும் முதலீட்டு இணைப்புகளை பன்முகப்படுத்த 2030ம் ஆண்டு வரை ஒருங்கிணைந்து செயல்படுவது என நாங்கள் ஒப்புக்கொண்டு உள்ளோம். கப்பல் கட்டுமானம், எரிசக்தி, முக்கிய கனிமங்கள் உள்ளிட்டவற்றை மேலும் மேம்படுத்துவது பற்றி நாங்கள் பேசினோம்.
இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

