பஸ் வசதி செய்து கொடுத்த தமிழ் கலெக்டர் உத்தர கன்னடா கிராம மக்கள் மகிழ்ச்சி
பஸ் வசதி செய்து கொடுத்த தமிழ் கலெக்டர் உத்தர கன்னடா கிராம மக்கள் மகிழ்ச்சி
ADDED : நவ 09, 2024 11:18 PM

உத்தர கன்னடா: பள்ளிக்கு மாணவர்கள் செல்வதற்கு வசதியாக, பஸ் வசதியை, மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா செய்து கொடுத்தார். கிராம மக்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.
உத்தர கன்னடா மாவட்டம், சோய்டா தாலுகாவில் மலம்பிட், கூடல்கான், கவாலிவாடா, காசர்வாடி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ளன.
இந்த கிராமங்களுக்கு சாலை வசதி இருந்தும், சரியான பஸ் வசதி இல்லை. இதுகுறித்து, அப்பகுதியினர், பல்வேறு கோரிக்கைகள் விடுத்தும், எந்த பயனும் கிடைக்கவில்லை.
பஸ்கள் இல்லாததால், பள்ளிக்கு மாணவர்கள் செல்ல முடியாத சூழல் நிலவியது. இந்த கிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லாததால், அப்பகுதி மக்கள், ஊரை விட்டு வெளியேறினர். கிராமத்தில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே மாணவர்கள் பயிலும் சூழல் இருந்தது.
மேற்படிப்பை படிப்பதற்கு 10 கி.மீ., துாரம் வனப்பகுதியில் நடந்து செல்ல வேண்டும்.
காட்டு விலங்குகளின் அச்சுறுத்தலுக்கு பயந்து, பலரும் படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டனர். மாணவர்கள் படும் கஷ்டம் குறித்து, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து அறிந்த, உத்தர கன்னடா மாவட்ட கலெக்டர் லட்சுமிபிரியா, உடனடியாக பஸ் வசதி செய்யுமாறு அறிவுறுத்தினார்.
'குழந்தைகளின் உயிருடன் விளையாட வேண்டாம்' என, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை கண்டித்தார்.
கலெக்டரின் ஆணைப்படி, கிராமத்திற்கு பஸ் வந்தவுடன், கிராமத்து மக்கள் பட்டாசு வெடித்தனர்; இனிப்புகள் வழங்கினர். பஸ்சிற்கு மாலை அணிவித்து, தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர். பஸ் வருகையால், பத்து கிராமங்களும் திருவிழா போன்று காட்சி அளிக்கிறது. கலெக்டர் லட்சுமிபிரியா, தமிழகத்தின் தஞ்சாவூரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.