/
செய்திகள்
/
இந்தியா
/
2011 முதல் தமிழக உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் ...'கொர்ர்ர்!': உண்மையை போட்டு உடைத்தது மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு
/
2011 முதல் தமிழக உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் ...'கொர்ர்ர்!': உண்மையை போட்டு உடைத்தது மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு
2011 முதல் தமிழக உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் ...'கொர்ர்ர்!': உண்மையை போட்டு உடைத்தது மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு
2011 முதல் தமிழக உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் ...'கொர்ர்ர்!': உண்மையை போட்டு உடைத்தது மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு
UPDATED : அக் 12, 2025 12:01 AM
ADDED : அக் 11, 2025 11:52 PM

புதுடில்லி:தமிழகத்தின் காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து குடித்து மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில், 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியான சம்பவத்துக்கு தமிழக உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்பது தெரியவந்துள்ளது. கடந்த, 2011 முதல் அந்த மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் நடவடிக்கைகளில் தமிழக அரசு உரிய கவனம் செலுத்தாதது, சி.டி.எஸ்.சி.ஓ., எனப்படும், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் ஆய்வு வாயிலாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில், கடந்த மாதம் 15ம் தேதி முதல் 1 - 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. சளி மற்றும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற அந்த குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்தது தெரியவந்தது.
ரசாயனம்
இதையடுத்து, குழந்தைகளின் சிறுநீரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட திசுக்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில், குழந்தைகள் குடித்த, 'கோல்ட்ரிப்' இருமல் மருந்தில், நச்சுத் தன்மை ஏற்படுத்தும், 'டை எத்திலின் கிளைகால்' என்ற ரசாயனம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழகத்தின் காஞ்சிபுரத்தில், கோல்ட்ரிப் மருந்தை தயாரித்த, 'ஸ்ரீசன் பார்மா' நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டது. அதன் உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், 'ஸ்ரீசன்' நிறுவனத்தின் முறையற்ற செயல்பாடுகளில், தமிழக உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம், சரியாக கவனம் செலுத்தாததே காரணம் என்பது தற்போது அம்பலமாகிஉள்ளது.
இது குறித்து, மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும், 'ஸ்ரீசன்' மருந்து நிறுவனத்துக்கு, டி.என்.எப்.டி.ஏ., எனப்படும், தமிழக உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம், 2011ல் உரிமம் வழங்கியது.
இருமல் மருந்து குடித்து குழந்தைகள் இறந்ததை அடுத்து, அந்த நிறுவனத்தில் மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, கடந்த 3ம் தேதி ஆய்வு மேற்கொண்டது. இதில், மோசமான உட்கட்டமைப்புடனும், தேசிய மருந்து பாதுகாப்பு விதிகளை மீறியும், இந்த நிறுவனம் செயல்பட்டது தெரிய வந்தது.
தணிக்கை இல்லை இருப்பினும், 15 ஆண்டுகளாக செயல்படும் இந்த நிறுவனத்தின் மீது, தமிழக உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாக துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல், மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் எந்த தணிக்கைக்கும் இந்த நிறுவனம் உட்படுத்தப்படவில்லை.
எங்கள் தரவு தளங்களிலும் இந்த நிறுவனம் தொடர்பாக எந்த விபரமும் இல்லை. மருந்து
நிறுவனங்களின் தயாரிப்புகள், மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின், 'சுகம்' இணையதளத்தின் வாயிலாக புதுப்பிக்கப்பட வேண்டும். இந்த நிறுவனம், தங்கள் தயாரிப்புகளை புதுப்பிக்கவில்லை.
மருந்து உற்பத்தியாளர்கள் தொடர்பான பொது தரவுதளம் உருவாக்கும் நோக்கில், அனைத்து மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கும், மாநில உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு நிர்வாகங்களுக்கும், கடந்த 2023ல் மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு கடிதம் அனுப்பியிருந்தது.
அடுத்தடுத்து நடந்த மாதாந்திர ஆய்வு கூட்டங்களிலும், இந்த கருத்து வலியுறுத்தப்பட்டது. இருப்பினும், இந்த தளத்தில். 'ஸ்ரீசன்' நிறுவனம் இணைக்கப்படவில்லை. மாநில அரசும், இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இருமல் மருந்து குடித்து குழந்தைகள் இறந்ததை அடுத்து, மத்திய பிரதேச அரசின் அறிவுறுத்தலின் பேரிலேயே, தமிழக உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாக அதிகாரிகள், காஞ்சிபுரத்தில் செயல்படும் ஆலையில் ஆய்வு நடத்தினர்.
ஆனால், இது குறித்து, மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்புக்கு எந்த தகவலையும் அவர்கள் வழங்கவில்லை. அங்கிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளின் ஆய்வு குறித்தும் தெரியப்படுத்தவில்லை.
கடந்த 3ம் தேதி, ஆய்வு முடிவுகள் குறித்து தமிழக உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் தன்னிச்சையாக அறிவித்ததை அடுத்தே, அது குறித்து மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்புக்கு தெரிய வந்தது.
இதையடுத்தே, 'கோல்ட்ரிப்' இருமல் மருந்தில், 'டை எத்திலின் கிளைகால்' அனுமதிக்கப்பட்ட 0.1 சதவீதத்தை விட, 48 சதவீதம் அதிகம் இருந்தது எங்கள் கவனத்துக்கு வந்தது. இந்த விவகாரத்தில், தமிழக அதிகாரிகளின் தகவல் இருட்டடிப்பால், உண்மையான தகவல்களை எங்களால் வழங்க முடியாமல் போனது.
மருந்து நிறுவனத்தில் மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்திய போது, மாநில மருந்து ஆய்வாளர் ஒருவரை அனுப்ப கோரப்பட்டது. இருப்பினும், அவர் எங்கள் குழுவுடன் ஆய்வில் பங்கேற்கவில்லை.
கடந்த 4ல், சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க தமிழக உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்துக்கு, மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு கடிதம் அனுப்பியது.
இதில், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததை தொடர்ந்து, கடந்த 8ம் தேதி தமிழகம் வந்த மத்திய பிரதேச போலீசார், இருமல் மருந்து நிறுவன உரிமையாளரை கைது செய்தனர்.
உலக சுகாதார நிறுவனத்தின், ஜி.எம்.பி., எனப்படும் நல்ல உற்பத்தி பொருட்களுக்கான சான்றிதழை, 'ஸ்ரீசன் பார்மா' பெறவில்லை. அதேபோல், மருந்து மற்றும் அழகுசாதன பொருட்கள் சட்டத்தில் உள்ள தரமான பொருட்களுக்கான 'எம்' அட்டவணையில், 2023ல் திருத்தப்பட்ட விதிகளையும் இந்த நிறுவனம் பூர்த்தி செய்யவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.