ADDED : ஜன 23, 2024 05:48 AM
பெங்களூரு: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இவர் மீதான வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு, தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு மாற்றப்பட்டது. விசாரணை பல ஆண்டுகளாக நடந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 2016ல் ஜெயலலிதா இறந்த பின்னர், அவர் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
இந்த வழக்கில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
நான்கு ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கில், ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட, விலை உயர்ந்த பொருட்களை ஏலத்தில் விடும்படி, பெங்களூரு சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி என்பவர், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை நீதிபதி மோகன் விசாரித்து வருகிறார். பொருட்களை ஏலம் விடுவதற்கு, கிரண் ஜவளி என்ற வக்கீல் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், வழக்கு விசாரணை நேற்று நடந்தது. அப்போது ஜெயலலிதாவின் சொத்து விபரங்களை, வக்கீல் கிரண் ஜவளி தாக்கல் செய்தார். விசாரணையின் போது, தமிழகத்தில் இருந்து, கர்நாடகாவுக்கு வழக்கை மாற்றியதால், கர்நாடகாவுக்கு வழக்கு செலவாக, வரைவோலை மூலம் 5 கோடி ரூபாய் செலுத்த, தமிழக அரசுக்கு, நீதிபதி மோகன் உத்தரவிட்டார்.
அடுத்த விசாரணையின் போது தமிழக உள்துறை செயலர் ஆஜராகி, ஜெயலலிதாவின் பொருட்களை அடையாளம் காட்ட வேண்டும் என்றும் கூறினார்.
ஜெயலலிதாவின் பொருட்களை கர்நாடகாவில் ஏலம் விடுவதற்கு பதிலாக, தமிழக அரசிடம் ஒப்படைக்க, சிறப்பு நீதிமன்றம் முடிவு செய்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

