இந்தியாவின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் தமிழகத்தின் பங்களிப்பு: ராகுல்
இந்தியாவின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் தமிழகத்தின் பங்களிப்பு: ராகுல்
ADDED : ஜன 23, 2025 05:08 PM

புதுடில்லி: ''தமிழகத்தின் பங்களிப்புகள், இந்தியாவின் புதுமை மற்றும் ஒற்றுமையை பிரதிபலிக்கின்றன'', என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள, அண்ணா நுாற்றாண்டு நுாலக அரங்கில், இன்று (ஜன.,23), இந்திய துணைக்கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும், 'இரும்பின் தொன்மை' என்ற நுாலை, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில், 5,300 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் இரும்பு பயன்படுத்தப்பட்டது. இரும்பு தாதுவிலிருந்து இரும்பை பிரிக்கும் தொழில்நுட்பம் தமிழகத்தில் தான் தொடங்கியது. இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்து தான் எழுதப்படும் எனக்கூறியிருந்தார்.
இது தொடர்பாக ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவின் வளமான பாரம்பரியம், உலகிற்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது. தமிழகத்தில், சமீபத்திய தொல்லியல்துறை கண்டுபிடிப்புகள் 5,300 ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பு பயன்பாட்டில் இருந்ததை காட்டுகிறது. இது இரும்பு யுகத்தில் ஆரம்ப கால முன்னேற்றங்களை காட்டுகிறது. தமிழகத்தின் பங்களிப்புகள், இந்தியாவின் புதுமை மற்றும் ஒற்றுமையை பிரதிபலிக்கின்றன.
ஒவ்வொரு மாநிலத்திலும் சமூகத்திலும் மற்றும் குரலிலும் செழித்து வளரும் இந்தியாவின் உணர்வைக் கொண்டாடுவோம். இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.

