வரி பகிர்வு: மாநிலங்களுக்கான பங்கை 1 சதவீதம் குறைக்க பரிசீலனை
வரி பகிர்வு: மாநிலங்களுக்கான பங்கை 1 சதவீதம் குறைக்க பரிசீலனை
ADDED : பிப் 28, 2025 06:34 AM

புதுடில்லி : மத்திய வரிகளில் இருந்து மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் வருவாய் அளவை 1 சதவீதம் குறைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய வரிகளில் இருந்து கிடைக்கும் வருவாயில், 41 சதவீதத்தை தற்போது மாநிலங்களுக்கு மத்திய அரசு பகிர்ந்து அளிக்கிறது. இந்நிலையில், இதை 1 சதவீதம் குறைத்து, 40 சதவீதமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மார்ச் மாத இறுதியில் அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படும் என்றும், அந்த பரிந்துரை, 16வது நிதி கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
தற்போதைய வரி பகிர்வின் அடிப்படையில் பார்க்கும்போது, 1 சதவீதம் குறைப்பதால், மத்திய அரசுக்கு, ஒரு நிதியாண்டில் 3,500 கோடி ரூபாய் கிடைக்கும். கடந்த 1980ல் 20 சதவீதமாக இருந்த மாநிலங்களுக்கான பங்கு, தற்போது, 41 சதவீதமாக உயர்ந்துள்ளது.
உட்கட்டமைப்பு வசதிகளுக்கு அதிக நிதி செலவிடுவதால், மத்திய அரசின் செலவு அதிகரித்து வருகிறது. இதையடுத்து, மாநிலங்களுக்கான வரி பங்கை 1 சதவீதம் குறைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மாநில அரசுகளுக்கான நிதி பகிர்வு குறித்து நிதி கமிஷனே, மத்திய அரசுக்கு ஆலோசனைகளை வழங்கும். அதன்படி, 16வது நிதி கமிஷனுக்கு மத்திய அரசு இந்த அறிவுறுத்தலை அனுப்பியுள்ளது.
அரவிந்த் பனகாரியா தலைமையிலான நிதி கமிஷன், வரும் அக்டோபரில், பரிந்துரைகளை அறிவிக்க உள்ளது. அதன்படி, 2026 - 27 நிதியாண்டில் இருந்து 16வது நிதி கமிஷன் பரிந்துரைகள் அமலுக்கு வரவுள்ளன. அதில், இந்த வரி பங்கு குறைப்பும் இருக்கும் என, கூறப்படுகிறது.