சேர்ந்து வாழ்ந்த காதலியை கொன்ற டாக்ஸி டிரைவர் கைது
சேர்ந்து வாழ்ந்த காதலியை கொன்ற டாக்ஸி டிரைவர் கைது
ADDED : டிச 16, 2025 12:14 AM

லக்னோ: உத்தர பிரதேசத்தில் மற்றொரு திருமணம் செய்வதற்காக, 'லிவின் பார்ட்னர்' ஆக திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்த காதலியின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்த டாக்ஸி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
ஹரியானாவில் கலேசர் தேசிய பூங்கா அருகே கடந்த 6ம் தேதி, 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் தலையில்லாத உடல் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில், அது உ.பி.,யின் சஹாரன்பூரைச் சேர்ந்த உமா, 30, என்பது தெரியவந்தது.
இவர், தன் கணவருடன் ஏற்பட்ட தகராறில் விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்தார். இவருக்கு, 13 வயதில் ஒரு மகன் உள்ளார். அவர் தன் தந்தையின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் டாக்ஸி டிரைவர் பிலால் என்பவருடன் உமாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவரை திருமணம் செய்து கொள்ளாமல், 'லிவின் பார்ட்னர்' முறையில் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.
இதற்கிடையே பிலால், மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்து, உமா உடனான உறவை முறித்துக்கொள்ள விரும்பினார். இதற்காக, கடந்த 6ம் தேதி சஹாரன்பூரில் இருந்து உமாவை, தன் காரில் அண்டை மாநிலமான ஹரியானாவுக்கு அழைத்து சென்றார்.
அங்குள்ள கலேசர் வனப்பகுதி அருகே ஒதுக்குப்புறமான இடத்தில் உமாவின் தலையை துண்டித்துவிட்டு பிலால் தப்பிச்சென்றார். அதன்பின் சஹாரன்பூரில் உள்ள தன் வீட்டிற்கு திரும்பி, தன் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். பிலாலை கைது செய்த போலீசார், துண்டிக்கப்பட்ட உமாவின் தலையையும் மீட்டனர்.

