259 ரன்னுக்கு ஆல்அவுட்டான நியூசி., அணி: 10 விக்கெட்டையும் ஈஸியா வீழ்த்திய தமிழக வீரர்கள்
259 ரன்னுக்கு ஆல்அவுட்டான நியூசி., அணி: 10 விக்கெட்டையும் ஈஸியா வீழ்த்திய தமிழக வீரர்கள்
UPDATED : அக் 24, 2024 04:45 PM
ADDED : அக் 24, 2024 04:06 PM

புனே: இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 259 ரன்னுக்கு ஆல்அவுட்டானது. அந்த அணியின் 10 விக்கெட்களையும் தமிழகத்தை சேர்ந்த அஷ்வின் (3), வாஷிங்டன் சுந்தர் (7) கைப்பற்றி அசத்தினர்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதில் பெங்களூருவில் நடந்த முதல் டெஸ்டில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று (அக்.,24) மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் 2வது டெஸ்ட் போட்டி துவங்கியது. 'டாஸ்' வென்ற நியூசி., அணி கேப்டன் டாம் லாதம் பேட்டிங் தேர்வு செய்தார்.
![]() |
முதல் இன்னிங்சை துவக்கிய நியூசிலாந்து அணியில் கேப்டன் லாதம் (15), வில் யங் (18), அரைசதம் கடந்த கான்வே (76) ஆகியோர் அஷ்வின் பந்துவீச்சில் அவுட்டாகினர். அடுத்து வந்த ரச்சின் ரவீந்திரா (65) தவிர மற்ற வீரர்கள் விரைவாக ஆட்டமிழந்தனர். இறுதியில் நியூசி., 259 ரன்னுக்கு ஆல்அவுட்டானது. நியூசிலாந்து அணியின் முதல் மூன்று விக்கெட்களை அஷ்வின் வீழ்த்த, மீதமுள்ள 7 விக்கெட்களையும் மற்றொரு சுழல்வீரரான வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தினார். இவர்கள் இருவரும் தமிழர்கள் என்பது கூடுதல் சிறப்பு.
அடுத்து முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. கேப்டன் ரோகித் சர்மா, சவுத்தி பந்தில் 'டக்' அவுட்டானார். முதல்நாள் முடிவில் இந்திய அணி 11 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்தது. ஜெய்ஸ்வால் (6), சுப்மன் கில் (10) அவுட்டாகாமல் இருந்தனர்.


