ADDED : நவ 22, 2024 07:10 AM
பெங்களூரு: பெங்களூரில் மூன்று நாட்கள் நடந்த தொழில்நுட்ப மாநாடு நேற்று நிறைவு பெற்றது. மாநாட்டை 36,837 பேர் பார்வையிட்டனர்; பல்வேறு படைப்புகளை கண்டு வியந்தனர்.
கர்நாடக தகவல் தொழில்நுட்ப துறை சார்பில், பெங்களுரு அரண்மனை மைதானத்தில், 24வது பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாடு இம்மாதம் 19ம் தேதியிலிருந்து நேற்று வரை நடந்தது. மாநாட்டை துவக்கி வைத்து பேசிய முதல்வர் சித்தராமையா, 'பெங்களூரில் ஏ.ஐ., தொடர்பான மையம் வருங்காலத்தில் அமையும்' என்றார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர். பல நாடுகளில் இருந்தும் மக்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.
உபயோகமற்ற எலக்ட்ரானிக் உபகரணங்களை வைத்து, உபயோகமாக பல்வேறு சிலைகள் செய்யப்பட்டு இருந்தன. மனிதனின் முகம், உலக உருண்டை, கர்நாடக அரசின் சின்னம், குதிரை சிலை போன்றவை வைக்கப்பட்டு இருந்தன. பார்வையாளர்கள் இதனை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
பிரிட்டனை சேர்ந்த பிளையிங் மேன் ஐசக் அல்பனோ பறந்து வந்து சாகசம் செய்தார். இது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. மூன்று நாட்கள் நடந்த மாநாடு நேற்றுடன் முடிவு அடைந்தது. இந்த மாநாட்டில் 51 நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். 521 பேர் பேசி உள்ளனர். 36,837 பேர் பார்வையாளர்களாக வந்துள்ளனர்.
வியந்து போனேன்
உபயோகமற்ற எலக்ட்ரானிக் பொருட்களை வைத்து, சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதை பார்த்து நான் வியந்தேன். நிறைய நாடுகளில் இருந்து மக்கள் வந்துள்ளனர். இதில் பங்கேற்றவர்களின் திறமையை பார்த்து பிரமித்துப் போனேன்.
ஜெனிபர், 21, பெங்களூரு.