டில்லி அரசின் தலைமை செயலகத்தில் தொழில்நுட்ப மேம்பாட்டு பணி துவக்கம்
டில்லி அரசின் தலைமை செயலகத்தில் தொழில்நுட்ப மேம்பாட்டு பணி துவக்கம்
ADDED : நவ 23, 2025 01:10 AM
புதுடில்லி: தலைமைச் செயலகத்தில், 'லேன்' எனப்படும் உட்புற இணைய வலையமைப்பு மற்றும் 'வைபை' வசதிகளை மேம்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளன.
இதுகுறித்து, டில்லி அரசின் தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
டில்லி அரசின் தலைமைச் செயலகத்தில், 10 ஆண்டுகளுக்கு முன், லேன் மற்றும் வைபை வசதிகள் செய்யப்பட்டன. தொழில்நுட்பங்கள் அதீத வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், தற்போதுள்ள லேன் மற்றும் வைபை இணைப்புகளால், பல நேரங்களில் கம்ப்யூட்டர்கள் மெதுவாக இயங்குகின்றன.
அதனால், அரசின் பணிகளிலும் தொய்வு ஏற்படுகிறது. எனவே, நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப லேன் மற்றும் வைபை இணைப்புகளை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது.
லேன் என்பது ஒரு குறிப்பிட்ட இடம் அல்லது கட்டடத்துக்குள் கம்ப்யூட்டர் மற்றும் டிஜிட்டல் சாதனங்களை ஒன்றோடொன்று இணைக்கிறது.
ரூட்டர்கள், சுவிட்சுகள், பயர்வால்கள் மற்றும் சிக்னல் ரிப்பீட்டர்கள் ஆகிய சாதனங்கள் இந்த இணைப்புக்கு பயன்படுத்தப்படுகின்றன.
தற்போதைய டிஜிட்டல் தேவைகளைப் பூர்த்தி செய்ய டில்லி அரசின் தலைமைச் செயலகத்தில் லேன் மற்றும் வைபை உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
இந்தப் பணிகள் முடிந்தவுடன், அதிவேக மற்றும் பாதுகாப்பான தகவல் தொடர்பு ஏற்படும். மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப உள்கட்டமைப்பு அனைத்து துறைகளுக்கும் தடையற்ற இணைப்பை உறுதி செய்யும்.
இதனால், கிளவுட் அடிப்படையிலான கருவிகள் மற்றும் டிஜிட்டல் தளங்களை திறம்பட பயன்படுத்த முடியும்.
தற்போது, பொதுப்பணித் துறை கட்டடத்தின் லேன் மற்றும் வைபை உள்கட்டமைப்பை ஆய்வு செய்து, அங்கு செய்ய வேண்டிய மேம்பாட்டுப் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இது, அனைத்து துறை அலுவலகங்களிலும் விரிவுபடுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
டில்லி தலைமைச் செயலகம் வருமான வரித்துறை அலுவலகம் அருகே, ஒன்பது மாடி கட்டடத்தில் செயல்படுகிறது.
முதல்வர், அமைச்சர்கள், தலைமைச் செயலர் மற்றும் பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகளின் அலுவலகங்கள் இந்தக் கட்டடத்தில் அமைந்துள்ளன.

