ADDED : நவ 23, 2025 01:10 AM
புதுடில்லி: டில்லி மாநகரப் போலீசின் அதிரடி சிறப்பு நடவடிக்கையில், தென்மேற்கு டில்லியில் 254 கோடி ரூபாய் சைபர் கிரைம் மோசடி செய்த 46 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:
ஏ.டி.எம்., மோசடி, டிஜிட்டல் கைது மோசடி, வேலை வாங்கித் தருவதாக மோசடி, டிஜிட்டல் மார்க்கெட்டிங் மோசடி உட்பட சைபர் கிரைம் மோசடிக் குற்றவாளிகளைப் பிடிக்க, தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சிறப்பு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
டில்லி, உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானாவில் நடத்திய அதிரடி சோதனையில், அஸ்கர் அலி,23, அங்கித் சிங், 26, ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இருவரிடமும் நடத்திய விசாரணை அடிப்படையில் நொய்டா, டில்லி மற்றும் காஜியாபாத் ஆகிய இடங்களில் தொடர்ந்து ஏழு நாட்கள் அதிரடி சோதனை நடத்தி, மோசடிக் கும்பலுக்கு மூளையாகச் செயல்பட்ட ரவிகுமார் சிங், 31, கைது செய்யப்பட்டார்.
இந்தக் கும்பலைச் சேர்ந்த மற்றொரு குற்றவாளி ரவி மிஸ்ராவை தேடும் பணி நடக்கிறது. இதற்கிடையில், கோட்லா முபாரக்பூரில் ஒரு கால் சென்டரில் ராஜன் சிங் நேகி, 32, கமலேஷ் பால், 35, மற்றும் 24 வயது பெண் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல் மண்ட்வாலி மற்றும் நஜப்கரில் நடத்திய சோதனையில் ராஜேஷ், 31, சஜன் குமார், 27, ஆகாஷ் குமார், 25 மற்றும் கோபால் யாதவ், 25, ஆகியோர் பிடிபட்டனர். நிலோதியில் ரஞ்சித் சிங், தப்ரி விரிவாக்கத்தில் காயத்ரி குமாரி, 23, அமன் பரத்வாஜ், 32, ஆகியோரும் சிக்கினர்.
சைபர் கிரைம் மோசடிக் கும்பலைச் சேர்ந்த மொத்தம் 42 பேர் கைது செய்யப்பட்டு, மூன்று லேப்-டாப்கள், இரண்டு கம்ப்யூட்டர்கள், 43 மொபைல் போன்கள், 17 வங்கிக் கணக்குப் புத்தகங்கள், 14 டெபிட் கார்டுகள், 1.6 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்
போலி வர்த்தகம் மோசடி முதலீட்டு வலைத்தளத்தில், 49.35 லட்சம் ரூபாயை பறிகொடுத்தவர், ஜூன் மாதம் 14ம் தேதி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
வழக்குப் பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் கர்நாடகா, மஹாராஷ்டிரா, குஜராத், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் 67க்கும் மேற்பட்ட சைபர் கிரைம் குற்றங்களுடன் தொடர்புடைய கும்பல் இந்த மோசடியை செய்தது தெரிய வந்தது.
கடந்த, 20ம் தேதி அதுல் குமார், 34, வர்ஷா சர்மா, 35, அஜய் சர்மா, 28, மற்றும் 54 வயது பெண் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். விசாரணை நடக்கிறது.

