'தற்காலிக பணியாளர்களுக்கு அரசு வேலை: மாதந்தோறும் ரூ.30,000 சம்பளம் நிச்சயம்': தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி
'தற்காலிக பணியாளர்களுக்கு அரசு வேலை: மாதந்தோறும் ரூ.30,000 சம்பளம் நிச்சயம்': தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி
ADDED : அக் 22, 2025 11:26 PM

பாட்னா: ''பீஹாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆட்சிக்கு வந்தால், தற்காலிக பணியாளர்கள், 30,000 ரூபாய் சம்பளத்துடன் நிரந்தரமாக்கப்படுவர்,'' என, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி அளித்துள்ளார்.
பீ ஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்,- பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு, நவ., 6 மற்றும் 11ம் தேதிகளில், இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.
தே.ஜ., கூட்டணியில் தொகுதி பங்கீடுகள் முடிவு செய்யப்பட்டு, வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
எதிர்க்கட்சியில் உள்ள 'மகாகத்பந்தன்' கூட்டணியில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது. இருப்பினும், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி தேர்தல் பிரசாரத்தில் முழு வீச்சில் ஈடுபட்டு, வாக்குறுதிகளை வாரியிறைத்து வருகிறார். பாட்னாவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
பீஹாரில் உலக வங்கியின் உதவியுடன், 'ஜீவிகா' எனப்படும் பீஹார் கிராமப்புற வாழ்வாதாரத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மகளிர் சுய உதவிக் குழுக்களான இதில் பணிபுரியும் பெண்கள், 'ஜீவிகா தீதி' என அழைக்கப்படுகின்றனர்.
மாநில அரசு, இவர்களுக்கு அநீதி இழைக்கிறது. இவர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகின்றன.
வரும் தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் வெற்றி பெற்று ஆட்சி அமைந்தால், மாநிலம் முழுதும் உள்ள ஜீவிகா தீதிகள் இரண்டு லட்சம் பேருக்கும், மாதந்தோறும் 30,000 ரூபாய் சம்பளத்துடன் நிரந்தர அரசு வேலை வழங்கப்படும்.
அவர்களின் தற்போதைய கடன்களுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்படும். மேலும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும். இது, சாதாரண அறிவிப்பல்ல. நீண்ட நாட்களாக அவர்களால் வைக்கப்படும் கோரிக்கைகளுக்கான தீர்வு.
அனைத்து ஜீவிகா தீதிகளுக்கும், அரசு 5 லட்சம் ரூபாய் சுகாதார காப்பீட்டுத் தொகையை புதிதாக ஆட்சி அமைக்கும் அரசு வழங்கும். பிற அரசு பணிகளில் அவர்கள் ஈடுபட்டால், மாதந்தோறும் கூடுதலாக 2,000 ரூபாய் வழங்கப்படும்.
அனைத்து துறைகளிலும் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிபவர்களின் திறமையும், சம்பளமும் இடைத்தரகர்களால் உறிஞ்சப்படுகின்றன. அவற்றை முறியடிக்கும் வகையில், ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களும் நிரந்தரமாக்கப்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.