குஜராத்திகள் குறித்து அவதுாறு மன்னிப்பு கேட்டார் தேஜஸ்வி
குஜராத்திகள் குறித்து அவதுாறு மன்னிப்பு கேட்டார் தேஜஸ்வி
ADDED : ஜன 23, 2024 02:00 AM

புதுடில்லி, குஜராத்திகள் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மன்னிப்பு கேட்டுள்ளார். இதையடுத்து, வழக்கை தொடர்வது குறித்து பதிலளிக்கும்படி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பீஹார் துணை முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ் மீது, உச்ச நீதிமன்றத்தில், அவதுாறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த, 2023, மார்ச், 22ல் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, அவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தொழிலதிபர் கவுதம் அதானி ஆகியோரை குறிக்கும் வகையில், அவர் கருத்து தெரிவித்திருந்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
இரண்டு ஏமாற்றுகாரர்கள் உள்ளனர். அவர்கள் மற்றொரு ஏமாற்றுகாரர் மோசடிகள் செய்வதற்கு அனுமதி அளித்துள்ளனர். தற்போது நம் நாட்டில், குஜராத்தியர்கள் மட்டுமே ஏமாற்றுக்காரர்களாக உள்ளனர்; அவர்களுடைய மோசடிகள் மன்னிக்கப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
குஜராத்திகளை அவமதிக்கும் வகையில், தேஜஸ்வி யாதவ் பேசியதை எதிர்த்து, குஜராத்தைச் சேர்ந்த ஹரேஷ்பாய் பிராணசங்கர் மேத்தா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை குஜராத்தில் இருந்து வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி, தேஜஸ்வி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு, நீதிபதிகள் அபய் ஓகா, உஜ்ஜல் புயான் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அமர்வு கூறிஉள்ளதாவது:
தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கேட்டு, அந்த வார்த்தைகளை திரும்பப் பெறுவதாக தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். அதனால், இந்த அவதூறு வழக்கைத் தொடர வேண்டுமா என்பது குறித்து, 29ம் தேதிக்குள் புகார்தாரர் தெரிவிக்க வேண்டும்.
மன்னிப்பு கேட்டுள்ளதால், நீதிமன்றத்துக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்த வழக்கை தள்ளுபடி செய்யவும் முடியும் என்பைத நினைவில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.

