இடஒதுக்கீடு வழங்கியும் நிறைவேற்ற முடியாமல் தவிக்கும் தெலுங்கானா அரசு
இடஒதுக்கீடு வழங்கியும் நிறைவேற்ற முடியாமல் தவிக்கும் தெலுங்கானா அரசு
ADDED : ஜூலை 03, 2025 12:47 AM

தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, கடந்தாண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பை தெலுங்கானா அரசு நடத்தியது. இதன்படி, நாட்டில், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய மாநிலங்களில் தெலுங்கானாவும் ஒன்றாக மாறியது.
ஜாதிவாரி கணக்கெடுப்பின் முடிவில், பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கையை கண்டறிந்த ரேவந்த் ரெட்டி அரசு, நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலில், அவர்களுக்கென தனி இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்தது. உள்ளாட்சி தேர்தலில், பிற்படுத்தப்பட்டோருக்கு 23 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில், அதை 42 சதவீதமாக அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இதற்கான மசோதா சட்டசபையில், கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்டது.
உத்தரவு
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கல்வி அமைப்புகள், வேலைவாய்ப்பு மற்றும் உள்ளாட்சி பதவிகளில் 42 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் வகையில், சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இது, மத்திய அரசு வாயிலாக ஜனாதிபதியின் ஒப்புதலுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. இருப்பினும், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான, 42 சதவீத இடஒதுக்கீடு கொள்கை அங்கு இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதற்கு தெலுங்கானா உயர் நீதிமன்றம் சமீபத்தில் அளித்த உத்தரவே காரணம்.
தெலுங்கானாவில் இடஒதுக்கீடுகளை அறிவிக்கவும், கிராமப்புற உள்ளாட்சி தேர்தலை, 30 நாட்களுக்குள் நடத்தவும் அந்த உத்தரவில் கூறப்பட்டது. தெலுங்கானா அரசு நிறைவேற்றிய மசோதாவின்படி, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 42 சதவீதமும், பட்டியல் இனத்தவருக்கு 15 சதவீதமும், பழங்குடியினருக்கு 10 சதவீதமும் ஒதுக்கப்பட்டுள்ளன. இது மொத்த இடஒதுக்கீட்டில், 67 சதவீதம்.
கடந்த, 1992ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய மண்டல் வழக்கு தீர்ப்பின்படி, மொத்த இடஒதுக்கீடு 50 சதவீத வரம்பை தாண்டக்கூடாது. உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்க, 2018ம் ஆண்டில் பிற்படுத்தப்பட்டவருக்கான இட ஒதுக்கீடு 34ல் இருந்து 24 சதவீதமாக குறைக்கப்பட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவை புறக்கணித்து, மாநில அரசு சொந்தமாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்பதால், அதற்கு ஜனாதிபதியின் அனுமதி தேவை. இது தற்போதைய சூழலில் மிகவும் கடினமான ஒன்றாகும்.
சட்ட சிக்கல்
அனைத்து சமூகங்களுக்குமான இடஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்டிச் செல்ல வேண்டுமானால், அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட்டு, ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட வேண்டும். அவ்வாறு செய்தால், சட்ட சிக்கல்களில் இருந்து தப்ப முடியும்.
கடந்த 1994ல் அரசியலமைப்பை திருத்தி, ஒன்பதாவது அட்டவணையில் சேர்த்ததன் வாயிலாக, இந்த விவகாரத்தில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டது. தெலுங்கானா மாநிலத்துக்கு அது சாத்தியப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்த நடைமுறை சிக்கல்களால், பிற்படுத்தப்பட்டோருக்கு 42 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியும், அதை நிறைவேற்ற முடியாத சூழல் நிலவுகிறது.
-நமது சிறப்பு நிருபர்-