ஜிப்லி படம் பகிர்ந்த பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி; இடமாறுதல் செய்தது தெலுங்கானா அரசு!
ஜிப்லி படம் பகிர்ந்த பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி; இடமாறுதல் செய்தது தெலுங்கானா அரசு!
UPDATED : ஏப் 28, 2025 05:40 PM
ADDED : ஏப் 28, 2025 05:29 PM

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்மிதா சபர்வால், சமூக வலைதளத்தில் ஜிப்லி படம் பகிர்ந்ததை தொடர்ந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பிரபல ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்மிதா சபர்வால். இளைஞர் முன்னேற்றம், சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை சிறப்பு தலைமை செயலாளராக பதவி வகித்தார்.
இவர் சமீபத்தில், ஐதராபாத் மத்திய பல்கலை அருகே, நிலம் கையகப்படுத்துவதற்காக மரங்களை வெட்டிய விவகாரம் தொடர்பான படத்தை ஜிப்லி படமாக மாற்றி, தன் சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
இது, அரசின் செயல்பாட்டை கேலி செய்யும் வகையில் இருப்பதாக, ஆளும் காங்கிரஸ் கட்சியினர் புகார் கூறினர். அவரை போலீசார் விசாரணைக்கும் அழைத்தனர். விசாரணைக்கு சென்ற ஸ்மிதா, வாக்குமூலமும் அளித்து வந்தார்.
''என் பதிவை 2 ஆயிரம் பேர் மறு பகிர்வு செய்துள்ளனர். அவர்கள் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமா? நான் மட்டும் குறி வைத்து தாக்கப்படுகிறேனா? சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை இந்த நடவடிக்கை கேள்விக்கு உள்ளாக்குகிறது,'' என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் அவரை இடமாறுதல் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மாநில நிதி ஆணையத்துக்கு அவர் மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.தெலுங்கானா மாநிலத்தில் இன்னும் சில வாரங்களில் உலக அழகி போட்டி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்மிதா முன்னின்று செய்து வந்த நிலையில், அவர் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். அவருடன் சேர்த்து மொத்தம் 20 அதிகாரிகள் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
எனினும், ஸ்மிதா சபர்வால் காங்கிரஸ் ஆட்சியால் தொடர்ந்து அவமதிக்கப்படுவதாக, நெட்டிசன்கள் புகார் கிளப்பி வருகின்றனர். முந்தைய பி.ஆர்.எஸ்., கட்சி ஆட்சியில் ஸ்மிதா சபர்வால் மிகவும் செல்வாக்கான அதிகாரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.