கேட்கவே மனம் கலங்குது! பாலைவனத்தில் 4 நாள் பரிதவித்த இளைஞர் பலி
கேட்கவே மனம் கலங்குது! பாலைவனத்தில் 4 நாள் பரிதவித்த இளைஞர் பலி
ADDED : ஆக 24, 2024 12:20 PM

புதுடில்லி: சவுதி அரேபியாவில் 4 நாட்களாக, பாலைவனத்தில் வழி தெரியாமல் சுற்றித்தவித்த தெலுங்கானாவை சேர்ந்த முகமது ஷேசாத் கான் என்ற 27 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் கரீம் நகரை சேர்ந்தவர் முகமது ஷேசாத் கான், 27. இவர் சவுதி அரேபியாவில் தொலை தொடர்பு நிறுனத்தில் 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். உலகின் மிகவும் ஆபத்தான பாலைவனங்களில் ஒன்றான ரப் அல் காலி பாலைவனத்திற்கு முகமது ஷேசாத் சென்றார்.
ஆபத்தான பாலைவனம்
650 கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இந்த பாலைவனம் நஜ்ரான் மாகாணங்கள் உட்பட ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் மற்றும் ஏமன் வரை நீளமானது. இந்த பாலைவனத்திற்கு, முகமது ஷேசாத் கான் சென்று விட்டு, மீண்டும் வீட்டிற்கு வர வழி தெரியவில்லை. அவர் விடா முயற்சியாக 4 நாட்களாக போராடி பார்த்தார். அவரால் வீட்டுக்கு திரும்பி வரும் வழியை கண்டுபிடிக்க முடியவில்லை.
உணவு, தண்ணீர்
பாலைவனம் என்றாலும் தண்ணீர் இருக்காது, வெயில் கொளுத்தும் என நம் அனைவருக்கும் தெரியும். அவர் உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்து வந்துள்ளார். ஷேசாத் கானின் உயிரை கடுமையான வெயில் பறித்தது. மணல் திட்டுகளில் இரு சக்கர வாகனம் அருகே இறந்து கிடந்த முகமது ஷேசாத் கானின் உடல் மீட்கப்பட்டது. ஊர் விட்டு, ஊர் பிழைக்கப்போன இடத்தில், ஷேசாத் கானுக்கு நேர்ந்த துயரம், அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

