ஆந்திராவில் கோவிலில் கூட்ட நெரிசல்: 9 பேர் பலி- பலர் படுகாயம்
ஆந்திராவில் கோவிலில் கூட்ட நெரிசல்: 9 பேர் பலி- பலர் படுகாயம்
UPDATED : நவ 02, 2025 12:06 AM
ADDED : நவ 01, 2025 11:15 PM

ஸ்ரீகாகுளம்: ஆந்திராவில், வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி, 12 வயது சிறுவன், எட்டு பெண்கள் உட்பட, ஒன்பது பக்தர்கள் பலியாகினர்; 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்கா பகுதியில் வெங்கடேஸ்வர சுவாமி கோவில் அமைந்துள்ளது. அப்பகுதியில் வசித்து வந்த ஹரிமுகுந்த பாண்டா, 80, என்பவர், நான்கு மாதங்களுக்கு முன் இந்த கோவிலை கட்டினார்.
ஆந்திராவின் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் போலவே, இந்த கோவில் வடிவமைக்கப்பட்டதால், இந்த இடம், 'சின்ன திருப்பதி' என அழைக்கப் பட்டது.
கட்டுமான பணி
கோவிலின் ஒரு சில பகுதிகளில் கட்டுமான பணிகள் நடந்து வரும் நிலையில், ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலில் நாள்தோறும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
வழக்கமாகவே, இந்த கோவிலுக்கு நாள்தோறும், 1,000 - 1,500 பக்தர்கள் வரும் நிலையில், ஏகாதசி திருநாளான நேற்று, வழக்கத்தைவிட பக்தர்கள் அதிகம் காணப்பட்டனர். வளைந்து, நெளிந்து செல்லும் படிக்கட்டுகளில் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், காலை 11:00 மணியளவில், பக்தர்கள் காத்திருந்த நீண்ட வரிசையில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் குழந்தைகள், முதியோர் சிக்கி மூச்சுவிட முடியாமல் தவித்தனர்.
கைகளில் பூஜை சாமான்கள் அடங்கிய தட்டுகளுடன் நின்றிருந்த பெண்கள், நெரிசலில் சிரமப்பட்டனர். கைப்பிடிகள் எதுவும் இல்லாத நிலையில், ஒருவர் மீது ஒருவர் சாய்ந்தனர். இதனால், அலை அலையாய் நெரிசல் அதிகரித்தது.
படிக்கட்டுகளில் குழந்தைகளுடன் நின்றிருந்த பக்தர்கள் உள்ளே செல்லவோ, வெளியேறவோ முடியாமல் அலறினர்.
ஒரு கட்டத்தில் நிற்க முடியாமல் அருகில் இருந்தவர்கள் மீது அவர்கள் விழுந்தனர்.
படிக்கட்டுகளின் மேலே, 6 அடி உயரத்தில் நின்றிருந்த சிலர், நிலை தடுமாறி தரையில் விழுந்தனர். அவர்கள் மீதும் பலர் விழுந்தனர்.
மயங்கி விழுந்தனர்
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த விபத்தில், கூட்டத்தில் இருந்த 12 வயது சிறுவன், எட்டு பெண்கள் உட்பட ஒன்பது பேர் பரிதாபமாக பலியாகினர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 18 - 35 வயதை சேர்ந்தவர்கள்.
இந்த கூட்ட நெரிசலில், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஒரு சிலர் மயங்கி விழுந்தனர். அவர்களில் சிலருக்கு, அங்கேயே முதலுதவி அளிக்கப்பட்டது.
உள்ளூர் மக்கள் மற்றும் சம்பவ இடத்தில் இருந்த இளைஞர்கள், படுகாயம் அடைந்தவர்களையும், மயங்கி விழுந்தவர்களையும், அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த உள்ளூர் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், நெரிசலில் சிக்கியவர்களை மீட்டனர். இரண்டு மணி நேரத்துக்கு பின், அப்பகுதியில் இயல்பு நிலை திரும்பியது. இருப்பினும், கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் இறந்தது, அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இறந்தவர்களின்
குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா, 2 லட்ச ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா, 50,000 ரூபாயும் நிவாரணமாக அறிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், 'ஸ்ரீகாகுளம் விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிக்க டாக்டர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள அதிகாரிகளுக்கு நிவாரண நடவடிக்கைகளை மேற்பார்வையிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர்' என, தெரிவித்துள்ளார்.
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்' என, கூறியுள்ளார்.
மாநில அறநிலையத் துறை அமைச்சர் அனம் நாராயண ரெட்டி கூறுகையில், “இந்த கோவில், மாநில அறநிலையத் துறையின் கீழ் இயங்கவில்லை. இங்கு, 2,000 - 3,000 பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்யும் நிலையில், ஒரே நேரத்தில் 25,000 பேர் குவிந்துள்ளனர். அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. அரசுக்கும் முறையாக தகவல் தரப்படவில்லை. இதுவே விபத்துக்கு முக்கிய காரணம்,” என கூறினார்.

