துமகூரு - ஓசூர் ரோடு இணைப்பு எட்டு வழிச்சாலைக்கு 'டெண்டர்'
துமகூரு - ஓசூர் ரோடு இணைப்பு எட்டு வழிச்சாலைக்கு 'டெண்டர்'
ADDED : பிப் 01, 2024 06:58 AM
பெங்களூரு: துமகூரு ரோடு - ஓசூர் ரோட்டை இணைக்கும் வகையில், 73 கிலோ மீட்டர் துாரம், எட்டு வழிச்சாலை அமைக்கும் பணிகளுக்கு, உலகளாவிய டெண்டருக்கு, பி.டி.ஏ., அழைப்பு விடுத்துள்ளது.
பெங்களூரு ரூரல் பகுதிகளில், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், துமகூரு ரோடு - ஓசூர் ரோட்டை இணைக்க 73 கிலோ மீட்டர் துாரத்திற்கு புறவழிச்சாலை அமைக்க, கடந்த 2007ல் அப்போதைய அரசிடம் முன்மொழியப்பட்டது. அப்போது இந்த திட்டத்திற்கு ஆகும் செலவு 3,000 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டு இருந்தது.
ஆனால் நிலம் கையகப்படுத்துவது உட்பட பல பிரச்னைகளால், புறவழிச்சாலை அமைக்கும் திட்டம் அப்படியே, கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் அந்த திட்டத்தை தற்போது செயல்படுத்த, கர்நாடகா அரசு முன்வந்து உள்ளது. புறவழிச்சாலை என்பதற்கு பதிலாக, பெங்களூரு பிசினஸ் காரிடர் சாலை என்று சமீபத்தில் அரசு பெயர் மாற்றியது.
துமகூரு ரோடு - ஓசூர் ரோட்டை இணைக்கும் வகையில் 73 கிலோ மீட்டர் துாரத்திற்கு, எட்டு வழிச்சாலை அமைக்க, பி.டி.ஏ., எனும் பெங்களூரு வளர்ச்சி ஆணையம் உலகளாவிய டெண்டருக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த சாலையின் திட்ட மதிப்பு 27,000 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த சாலை பணிகளுக்காக 2,596 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட இருக்கிறது.
இந்த எட்டு வழிச்சாலை ஹெசர்கட்டா, தொட்டபல்லாப்பூர், பல்லாரி, ஹென்னுார், பழைய மெட்ராஸ், ஹொஸ்கோட், சர்ஜாபூர் சாலைகளை இணைக்கிறது. கிட்டத்தட்ட 80 கிராமங்கள் வழியாக இந்த சாலை அமைக்கப்படுகிறது.
கடந்த 2022ல் இரண்டு முறை டெண்டருக்கு அழைப்பு விடுத்த போது, யாரும் பங்கேற்கவில்லை என்றும், இந்த முறை டெண்டர் கண்டிப்பாக நடக்கும் எனவும், பி.டி.ஏ., அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.