பா.ஜ.,வுக்கு போட்டியாக காங்., மாநாடு கார்கே, பிரியங்காவுக்கு அழைப்பு
பா.ஜ.,வுக்கு போட்டியாக காங்., மாநாடு கார்கே, பிரியங்காவுக்கு அழைப்பு
ADDED : ஆக 27, 2025 06:03 AM

திருநெல்வேலியில் செப்., 7ல் நடக்கவுள்ள, தமிழக காங்கிரஸ் மாநாட்டுக்கு வருமாறு, கார்கே, பிரியங்காவுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.
கடந்த 22ம் தேதி, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில், பா.ஜ., பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாடு, திருநெல்வேலியில் நடந்தது. அதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், 'சோனியாவுக்கு ஒரே லட்சியம், ஒரே கனவு, தன் மகன் ராகுலை பிரதமராக்க வேண்டும் என்பது. அதேபோல், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தன் மகன் உதயநிதியை முதலவராக்க வேண்டும். இருவரின் கனவும் பலிக்கப் போவதில்லை. பிரதமர், முதல்வர் இந்த இரண்டு பதவிகளிலும், அவர்களுக்கு தோல்வி தான் கிடைக்கும்' என்றார்.
சமீபத்தில் நடந்த அகில இந்திய சபாநாயகர்கள் மாநாட்டில் பேசிய அமித் ஷா, பார்லிமென்டில் விவாதங்கள் நடக்க விடாமல், எதிர்க்கட்சிகள் முடக்கி வருவதாக குற்றம் சாட்டியிருந்தார்.
எனவே, அமித் ஷாவின் இந்த இரண்டு குற்றச்சாட்டுக்கும் பதிலடி தருவதற்கும், வாக்காளர்கள் திருட்டு குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்வதற்கும், தமிழக காங்கிரஸ் சார்பில், செப்., 7ம் தேதி, திருநெல்வேலியில் தன் தலைமையில், மாநில மாநாடு நடத்தப்படும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று அறிவித்துள்ளார்.
அதில் பங்கேற்குமாறு, காங்கிரஸ் தலைவர் கார்கே, கட்சியின் பொதுச்செயலர் பிரியங்கா ஆகியோருக்கு, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், செப்., 9ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடக்க இருப்பதால், கார்கே, பிரியங்கா இருவரும், திருநெல்வேலி மாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என, டில்லி காங்., வட்டாரங்கள் கூறுகின்றன.
- நமது நிருபர் -