மணிப்பூரில் மீண்டும் பதற்றம் கூகி எம்.எல்.ஏ.,வுக்கு மிரட்டல்
மணிப்பூரில் மீண்டும் பதற்றம் கூகி எம்.எல்.ஏ.,வுக்கு மிரட்டல்
ADDED : பிப் 06, 2026 01:01 AM

இம்பால்: மணிப்பூரில் புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், 'கூகி சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் அதில் பங்கேற்கக் கூடாது' என, அந்த சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இதை வலியுறுத்தி சுராசந்த்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில், முழு கடையடைப்பு போராட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரின் 13வது முதல்வராக, பா.ஜ., மூத்த தலைவர் யும்னம் கெம்சந்த் சிங் நேற்று முன்தினம் பதவியேற்றார்.
கூகி சமூகத்தைச் சேர்ந்த பா.ஜ., - எம்.எல்.ஏ., நெம்சா கிப்ஜென், நாகா மக்கள் முன்னணி எம்.எல்.ஏ., டிக்ஹோ ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.
இந்நிலையில், கூகி சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் யாரும் பா.ஜ., அரசில் பங்கேற்கக்கூடாது என்றும், மீறுவோருக்கு ஏற்படும் விளைவுகளுக்கு அவர்களே பொறுப்பு என்றும் அந்த சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் எச்சரித்துள்ளன.
இதுபோல பல்வேறு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளதால், குழப்பமான சூழல் நிலவுகிறது.
கூகி ஆதிக்கம் செலுத்தும், காங்போக்பி மாவட்டத்தில் உள்ள லெய்மகாங் அருகே, நெம்சா கிப்கென் துணை முதல்வராக பதவியேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டயர்களை எரித்தும், மூங்கில் கட்டைகளை சாலைகளில் வைத்தும், போராட்டம் நடந்ததால் பதற்றம் நிலவியது.

