ADDED : நவ 09, 2024 11:19 PM

அத்திப்பள்ளி: மர அறுவை தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 5 கோடி ரூபாய் மதிப்பிலான மரங்கள், வாகனங்கள், பொருட்கள் எரிந்து நாசமாகின.
பெங்களூரு ரூரல் அத்திப்பள்ளி அருகே யடவனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் ஹர்ஷத் படேல்.
இவர், ஸ்ரீராம் என்ற பெயரில் மர அறுவை தொழிற்சாலை நடத்துகிறார். நேற்று முன்தினம் இரவு தொழிற்சாலையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், ஐந்து வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பின், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
ஆனாலும் தொழிற்சாலைக்குள் இருந்த ஏராளமான மரங்கள், இரண்டு வாகனங்கள், பொருட்கள் எரிந்து நாசமாகின. அதன் மதிப்பு ஐந்து கோடி ரூபாய். அதிர்ஷ்டவசமாக தீ விபத்து நடந்தபோது தொழிற்சாலைக்குள் தொழிலாளர்கள் யாரும் இல்லை.
விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. விசாரணை நடக்கிறது.