பயங்கரவாத சதித்திட்டம் முறியடிப்பு; காலிஸ்தான் பயங்கரவாதிகள் 3 பேர் கைது
பயங்கரவாத சதித்திட்டம் முறியடிப்பு; காலிஸ்தான் பயங்கரவாதிகள் 3 பேர் கைது
ADDED : ஆக 24, 2026 07:24 AM

-நமது நிருபர்-
சண்டிகரில் பயங்கரவாத சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது; 5 கிலோ எடையுள்ள வெடிகுண்டுடன் பாகிஸ்தானுடன் தொடர்புடைய காலிஸ்தான் பயங்கரவாதிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பஞ்சாப்பின் சண்டிகர் பஸ் நிலையத்தில் தடை செய்யப்பட்ட 'பப்பர் கல்சா இன்டர்நேஷனல்' காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் லவ்ரீத் சிங் (19), ஜஷன்ப்ரீத் சிங் (21), மற்றும் பிரபுப்ரீத் சிங் (19) என அடையாளம் காணப்பட்டனர்.
இவர்களிடமிருந்து சுமார் 5 கிலோ எடையுள்ள ஜெலட்டின் குச்சிகள் மற்றும் வெடிகுண்டு தயாரிப்புப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பிறகு வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெளிநாட்டில் உள்ள காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் முக்கிய நபரான சத்நாம் சிங் என்பவரின் உத்தரவின்படி, சண்டிகரில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த இவர்கள் திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.உளவுத்துறை அளித்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சண்டிகர் பஸ் நிலையத்தில் குண்டுவெடிப்பு நடத்துவது இவர்களின் நோக்கம் அல்ல என்றும், அவர்களின் இலக்கு நகரின் வேறொரு பகுதியில் இருந்திருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
