ADDED : அக் 26, 2024 01:12 AM

புதுடில்லி : பாகிஸ்தான் ராணுவத்துக்கு சொந்தமான இடத்தில் லஷ்கர், ஹிஜ்புல் முஜாகிதீன், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்புகள் கூட்டு பயிற்சி முகாம் நடத்துவதாக நம் உளவுத்துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் சம்பவத்துக்கு பின் தலைமறைவாக இருந்த அல் -- குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன், பாகிஸ்தானின் அபோதாபாத் என்ற இடத்தில் பதுங்கு குழிகள் அடங்கிய ரகசிய வீட்டில் பதுங்கி இருந்தார்.
அவரது இருப்பிடத்தை அறிந்த அமெரிக்க ராணுவம், 2011, மே மாதம் அவரை சுற்றி வளைத்து கொன்றது. அந்த கட்டடத்தை பாகிஸ்தான் அரசு 2012ல் இடித்து தரைமட்டமாக்கியது.
இந்நிலையில், பின்லேடன் பதுங்கியிருந்த அதே அபோதாபாதில் லஷ்கர், ஹிஜ்புல் முஜாகிதீன், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்புகள் கூட்டாக இணைந்து பயிற்சி முகாம் நடத்தி வருவதாக நம் உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்த இடம், பாக்., ராணுவத்துக்கு சொந்தமானது என்றும், பயங்கரவாத பயிற்சி முகாமுக்கு அடுத்த வளாகத்தில் ராணுவ பயிற்சி முகாம் அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
எனவே, ராணுவத்தின் அனுமதியின்றி வெளியாட்கள் யாரும் அந்த பகுதிக்குள் நுழைய முடியாது. இது, பயங்கரவாதிகளுக்கு மிகப் பெரிய பாதுகாப்பை அளிப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த மூன்று பயங்கரவாத அமைப்புகளுக்கான பயிற்சி முகாமாகச் செயல்படும் இந்த இடத்தில் வைத்து, அந்த அமைப்புகளுக்கான ஆள்சேர்ப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் நடப்பதாக தெரிகிறது.
பின்லேடன் பதுங்கியிருந்த வீடு அமைந்திருந்த இடத்தில் தான் இந்த பயிற்சி முகாம் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.
ஜம்மு - காஷ்மீரில் கடந்த சில தினங்களுக்கு முன், வெளிமாநில தொழிலாளர்கள் ஆறு பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ராணுவ வாகனம் மீது நேற்று முன்தினம் நடந்த தாக்குதலில், இரண்டு ராணுவ வீரர்கள் மற்றும் இரண்டு அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.
அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடந்து வரும் நேரத்தில், பாக்.,கில் செயல்பட்டு வரும் பயிற்சி முகாம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.