பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலி; ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை
பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலி; ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை
ADDED : அக் 26, 2024 12:06 AM

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், இரு ராணுவ வீரர்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, ஹெலிகாப்டர் மற்றும் ட்ரோன் வாயிலாக பயங்கரவாதிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் உள்ள அப்ரவாத் மலைப்பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற ரோந்து வாகனம் மீது, நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.
இதில், இரு ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ போர்ட்டர்கள் இருவர் என நான்கு பேர் பலியாகினர்; மேலும் இருவர் காயம் அடைந்தனர்.
தாக்குதல் நடத்தி விட்டு தப்பியோடிய பயங்கரவாதிகளை பிடிக்க தற்போது ஹெலிகாப்டர் மற்றும் ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
இந்த தேடுதல் வேட்டையை, மூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினர் கண்காணித்து வருகின்றனர்.
தேடுதல் வேட்டையின் ஒரு பகுதியாக, தாக்குதல் நடந்த பகுதிக்கு செல்லும் சாலைக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.
குல்மார்க் பகுதி ரிசார்ட்டுக்கு இயக்கப்பட்ட ரோப் கார் சேவையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.