மும்பை தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதி மக்கி மரணம்
மும்பை தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதி மக்கி மரணம்
ADDED : டிச 27, 2024 11:24 PM

புதுடில்லி: மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவரும், லஷ்கர் பயங்கரவாத அமைப்பின் துணை தலைவரும், பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் மைத்துனருமான அப்துல் ரஹ்மான் மக்கி, 76, பாகிஸ்தானில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில், 2008 நவ., 26ல், நம் அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 166 பேர் கொல்லப்பட்டனர். நாட்டையே உலுக்கிய இந்த தாக்குதலுக்கு, லஷ்கர் பயங்கரவாத அமைப்பின் துணை தலைவர் அப்துல் ரஹ்மான் மக்கி மூளையாக செயல்பட்டார்.
இதே போல், 2000ம் ஆண்டில், டில்லி செங்கோட்டையில் நடந்த பயங்கரவாத தாக்குதலிலும், 2018ல், 'ரைசிங் காஷ்மீர்' நாளிதழ் முதன்மை ஆசிரியரும், பத்திரிகையாளருமான ஷுஜாத் புகாரி கொலையிலும், அவருக்கு தொடர்பு இருந்தது.
பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட அப்துல் ரஹ்மான் மக்கி, தேடப்படும் பயங்கரவாதியாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டார். 2019 மே மாதம் அப்துல் ரஹ்மான் மக்கியை கைது செய்த பாக்., அரசு, லாகூரில் வீட்டு சிறையில் அடைத்தது.
பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளித்த வழக்கில், அவருக்கு பாக்., நீதிமன்றம் கடந்த 2020ல் ஆயுள் தண்டனை விதித்தது. அப்துல் ரஹ்மான் மக்கியை சர்வதேச பயங்கரவாதி என, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் 2023 ஜனவரியில் அறிவித்தது.
லாகூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த பயங்கரவாதி அப்துல் ரஹ்மான் மக்கி, மாரடைப்பால் நேற்று உயிரிழந்தார்.