ADDED : ஜன 06, 2024 01:19 AM
ஸ்ரீநகர், ஜம்மு - காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள சோட்டிகாம் கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாதுகாப்பு படையினர், அந்த கிராமத்தை சுற்றி வளைத்து நேற்று அதிகாலையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான இடத்தை பாதுகாப்பு படையினர் சூழ்ந்ததால், அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதி திடீரென துப்பாக்கியால் அவர்கள் மீது சுட்டார்.
நம் பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் பயங்கரவாதி கொல்லப்பட்டார்.
என்கவுன்டர் நடந்த இடத்தில் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள், ஏ.கே., ரக துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவை தொடர்பாக பாதுகாப்பு படை செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:
சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி பெயர் பிலால் அகமது பாட். லஷ்கர் - இ - தொய்பா அமைப்பைச் சேர்ந்த இவர், காஷ்மீரின் செக் சோலன் பகுதியை சேர்ந்தவர்.
ராணுவ வீரர் உமர் பயஸ் மற்றும் இரு தொழிலாளர்களை கொலை செய்ததில் முக்கிய பங்காற்றியவர்.
உள்ளூர் இளைஞர்களை பயங்கரவாத அமைப்பில் சேர துாண்டியதுடன், காஷ்மீர் பண்டிட் சுனில் குமார் பாட் கொலையிலும் இவருக்கு தொடர்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.