ADDED : அக் 18, 2024 01:08 AM
கலபுரகி, கலபுரகி சிறையில் கைதியை, பெண்களை வைத்து மயக்கும் 'ஹனிடிராப்' வாயிலாக, 50,000 ரூபாய் கேட்டு மிரட்டியதாக, பயங்கரவாதி உட்பட இருவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம், பெங்களூரு மல்லேஸ்வரத்தில் கடந்த 2013ல் குண்டு வெடித்த வழக்கில் கைதான பயங்கரவாதி சுல்பிகர் அலி, கலபுரகி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
சுல்பிகர் அலியும், இன்னொரு கைதியான ரவுடி பச்சனும் சேர்ந்து, சிறைக்குள் இருந்து மொபைல் போனில் பலரிடம் பேசி உள்ளனர். இவர்களுக்கு, கைதி சாகர் என்பவர் பழக்கமானார்.
குடும்பத்தினருடன் வீடியோ கால் பேச, சாகருக்கு இருவரும் மொபைல் போன் கொடுத்து உதவிஉள்ளனர்.
ஆறு மாதங்களுக்கு முன் சாகரிடம், சுல்பிகர் அலியும், பச்சனும் நைசாக பேசி, 'உனக்கு ஒரு பெண் வீடியோ கால் செய்வார். அவர் உடை இல்லாமல் இருப்பார். நீயும் நிர்வாணமாக வீடியோ கால் பேசலாம்' என கூறியுள்ளனர்.
சபல புத்தி சாகரும் ஒப்பு கொண்டார். வீடியோ காலில் தோன்றிய பெண்ணுடன் நிர்வாணமாக பேசினார். இதை, அந்த பெண் வீடியோ எடுத்துக் கொண்டார். பின், அந்த வீடியோவை சாகரிடம், சுல்பிகர் அலியும், பச்சனும் காண்பித்தனர். 'இந்த வீடியோவை வெளியிடாமல் இருக்க 50,000 ரூபாய் தர வேண்டும்' என, மிரட்ட ஆரம்பித்தனர்.
இது குறித்து சமீபத்தில் சிறையில் தன்னை சந்தித்த சகோதரரிடம், சாகர் கூறினார். சுல்பிகர் அலி, பச்சன் மீது கலபுரகி போலீசில், சாகரின் சகோதரர் புகார் செய்துள்ளார்.
கலபுரகி சிறையில் ஏற்கனவே கஞ்சா புகைத்தபடி, கைதிகள் வீடியோ கால் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், சிறையில் ஹனி டிராப்பும் நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.