பயங்கரவாதிகளின் மனித ஜி.பி.எஸ்., என்கவுன்டரில் சுட்டுக்கொலை
பயங்கரவாதிகளின் மனித ஜி.பி.எஸ்., என்கவுன்டரில் சுட்டுக்கொலை
ADDED : ஆக 31, 2025 01:33 AM

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நம் நாட்டுக்குள் ஊடுருவ கடந்த 30 ஆண்டுகளாக உதவி வந்த, பயங்கரவாதிகளின் ஜி.பி.எஸ்., என்று அழைக்கப்படுபவரான பகு கானை, நம் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை சேர்ந்தவர் பகு கான். இவர், பாக்., பயங்கரவாதிகள் நம் நாட்டுக்குள் ஊடுருவ, 1995 முதல் வழிகாட்டி வந்தவர்.
இந்திய எல்லைக்குள் எப்படி நுழைய வேண்டும், எந்த வழியாக செல்ல வேண்டும் என காடு, மேடு எல்லாம் சுற்றித் திரிந்து குறுக்கு வழிகளை தெரிந்து வைத்திருந்தவர்.
அதிலும் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள குரேஸ் பகுதியில் இருந்து இந்திய எல்லைக்குள் நுாற்றுக்கும் மேற்பட்ட ஊடுருவல்களை வெற்றிகரமாக நடத்தியதில் பகு கானுக்கு முக்கிய பங்கு இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால், பயங்கரவாத குழுக்கள் மத்தியில் பகு கான் பிரபலமாக பேசப்பட்டார். ஹெஸ்புல்லா பயங்கரவாத அமைப்பில் பணியாற்றி வந்த பகு கான், சமீபத்தில் ஒரு பயங்கரவாத குழுவை அழைத்துக் கொண்டு இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றார்.
நவ்ஷேரா அருகே நடந்த இந்த ஊடுருவல் முயற்சியை நம் பாதுகாப்புப் படையினர் முறியடிக்க முயன்றனர்.
அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில், பயங்கரவாதிகளின் மனித ஜி.பி.எஸ்.,ஸான பகு கான் மற்றும் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதனால், பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது. பகு கான் கொல்லப்பட்டது, பாக்., பயங்கரவாதிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

