எல்லை தாண்டிய எஜமானர்களின் கட்டளைக்கு பணிந்த பயங்கரவாதிகள்
எல்லை தாண்டிய எஜமானர்களின் கட்டளைக்கு பணிந்த பயங்கரவாதிகள்
UPDATED : ஏப் 25, 2025 09:26 AM
ADDED : ஏப் 25, 2025 06:44 AM

புதுடில்லி: பஹல்காம் தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்டவர், சயீபுல்லா கசூரி காலித் எனும் பயங்கரவாதி. லஷ்கர்- -இ- தொய்பா துணை தளபதி. பாகிஸ்தான் ராணுவத்துக்கு மிகவும் நெருக்கமானவர். காஷ்மீரில் இதற்கு முன் பல்வேறு பயங்கரவாத தாக்குதலில் இவருக்கு நேரடி தொடர்பு உண்டு.
2023ம் ஆண்டு காஷ்மீர் ரஜோரியில் ஏழு அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் இவருக்கு தொடர்பு உள்ளது. இந்தியாவால் தேடப்படும் முக்கிய பயங்கரவாதிகளில் ஒருவர். ஏற்கனவே அமெரிக்கா, இவரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. லஷ்கர் --இ- -தொய்பா இணை நிறுவனர் ஹபீஸ் சயீத் வலது கரமாக இருந்த அவர், பயங்கரவாதத்தை துாண்டும் உரைகளை வழங்குவது கண்டறியப்பட்டது.
பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு, எல்லைக்கு அப்பாலில் இருந்து இவர் உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். பஹல்காம் தாக்குதல் குறித்த முதல் தகவல் அறிக்கையிலும், எல்லைக்கு வெளியே உள்ள எஜமானர்களின் உத்தரவின்படி பயங்கரவாதிகள் செயல்பட்டதாகவும், சட்டவிரோத தானியங்கி ஆயுதங்கள் வைத்து தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.