ADDED : நவ 20, 2024 12:22 AM

கர்நாடகாவில் இரு அணியாக பிரிந்து செயல்படும் பா.ஜ.,வினருக்கு கட்சி மேலிடம், மறைமுகமாகவும், நேரடியாகவும் பரீட்சை வைத்து உள்ளது.
கர்நாடக மாநில பா.ஜ., தலைவர் பதவியை பிடிக்க பசனகவுடா பாட்டீல் எத்னால், சி.டி.ரவி உட்பட பலர் முயற்சித்தனர். ஆனால், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகனான, விஜயேந்திராவுக்கு, 'ஜாக்பாட்' அடித்தது. பதவியில் அமர துடித்த தலைவர்கள், ஏமாற்றம் அடைந்தனர்.
எதிர்ப்பு
இதை ஆர்வத்துடன் கவனித்து கொண்டிருந்த பா.ஜ., அதிருப்தி குழுவினர் ஒன்றாக சேர துடித்தனர். அவ்வப்போது தங்கள் உள்ள குமுறலை கொட்டி தீர்த்தனர். 'அவரை மாற்றுங்கள்' என்று கோரஸ் பாடினர். ஆனால், மேலிடம் அசைந்து கொடுக்கவில்லை.
இந்த வேளையில் தான், விவசாய நிலங்கள், வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என்ற காங்கிரஸ் அரசின் அறிவிப்பு வெளியானது. அரசின் செயலுக்கு, அவர்கள் கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியது. இதை சமாளிப்பதற்குள், காங்கிரஸ் விழி பிதுங்கி நிற்கிறது. 'முடா விவகாரமே முடியவில்லை; இதென்ன புதுக்கதை; தேன் கூட்டில் கையை விட்டு விட்டோமோ' என காங்கிரஸ் துடிதுடித்தது.
சொந்த மாவட்டம்
இதுதான் சமயம் என பா.ஜ.,வின் அதிருப்தியாளர்கள், எடியூரப்பா, விஜயேந்திராவின் சொந்த மாவட்டமான ஷிவமொக்காவில், 'கட்சி மாறலாமா' என துடித்து கொண்டிந்த, முன்னாள் அமைச்சர் குமார் பங்காரப்பா வீட்ில் ஆலோசனைக்காக கூடினர். இவரது அரசியல் மாவட்டமும் இது தான்.
இதில், 'விவசாயிகளின் வயிற்றில் அடிக்க துவங்கிய காங்கிரஸ் அரசை திக்குமுக்காட வைக்க, போராடலாமா' என்ற கோணத்தில் பேச்சை துவக்கினர். இதில் பா.ஜ., தலைவர் விஜயேந்திராவுக்கு அக்கறை இருந்தால், வரலாம்; இல்லையெனில், விட்டுவிடலாம்' என்று கூட்டத்தில் பேசிய எத்னால் கடுப்பேத்தினார்.
பொதுவாக ஒரு கட்சி போராட்டம் நடத்தும் என்றால், அதன் மாநில தலைவர் தான், முதலில் வாய் திறப்பது வழக்கம். ஆனால், இங்கேயோ, தலை கீழாக நடக்க துவங்கியது. இதை பா.ஜ., மற்றும் அதன் சார்பு அங்கமான ஆர்.எஸ்.எஸ்.,சும் கைகட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது.
கட்சியின் நடுநிலையாளர்களோ, 'காங்கிரசே அருமையான வாய்ப்பை கொடுத்துள்ளது; இதை பொறுப்பாக எடுக்காமல், தங்கள் இஷ்டப்படி தலைவர்கள் செய்கின்றனரே' என புலம்பி தீர்த்தனர்.
சமயோஜிதம்
இதனால் கோபமடைந்தாலும், சமயோஜிதமாக யோசித்த விஜயேந்திரா, 'மக்கள் விழிப்புணர்வு போராட்டம், பசனகவுடா பாட்டீல் எத்னால், ரமேஷ் ஜார்கிஹோளி, அரவிந்த் லிம்பாவளி, நான் (விஜயேந்திரா).
சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், மேலவை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி ஆகியோர் தலைமையில் தனித்தனியாக, மாநிலம் முழுதும் நடத்தப்படும்' என அறிவித்தார்.
இதன் மூலம், 'கட்சியில் பூசல் இல்லை' என அவர் எடுத்து காட்டினாலும், வெளிப்படையாக பூசல் தெரிந்தது வேறு விஷயம்.
பொறுத்து, பொறுத்து பார்த்த மேலிட மூத்த தலைவர்கள், மக்களை கவரும் அருமையான வாய்ப்பை பயன்படுத்தாமல், 'ஏனோ தானோ' என்று அரசியல் செய்யலாமா என காய்ச்சி எடுத்தனர்.
கட்சி மேலிடமோ, மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் தாமரை கொடியை பறக்க விடுவதில் மும்முரமாக இருந்ததால், கர்நாடகாவை பின்னர் பார்த்து கொள்ளலாம் என்று இருந்து விட்டது. ஆனாலும் அவ்வப்போது நிலைமையை விசாரித்து கொண்டிருந்தனர்.
மேலிடம் குட்டு
'எதிர்க்கட்சி என்பதை உணர்ந்து, அதற்கு ஏற்றபடி செயல்பட வேண்டும். வக்பு வாரிய விவகாரம் மிகவும் உணர்ச்சிகரமான விஷயம்.
இப்போராட்டம் சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டும். மாநில தலைவர் விஜயேந்திரா உருவாக்கிய 'டீம்' தான் பைனல்'.
'விவசாயிகளுக்கான பிரச்னைகள் குறித்து அறிக்கை தயாரித்து, அடுத்த மாதம் பெலகாவியில் துவங்க உள்ள சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும். சபைக்கு உள்ளேயும், வெளியேயும் அரசின் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும்' என மாநில தலைவர்களுக்கு அறிவுறுத்தியது மட்டுமின்றி, எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
மேலும், 'மாநில தலைவர் என்ற முறையில், அனைவரின் நம்பிக்கையை பெறுவது உங்கள் பணி.
'இவ்விஷயத்தில், முதல் ஆளாக பசனகவுடா பாட்டீல் எத்னால் தான் விஜயபுராவில் போராட்டம் நடத்தினார் என்பதை மறந்துவிடக்கூடாது' என்று விஜயேந்திராவுக்கும் 'குட்டு' வைத்தது. இனிமேலாவது அவர் விழித்து கொள்வாரா என்பது போக போகத்தான் தெரியும்.
- நமது நிருபர் -