நம்பகத்தன்மையை சோதிக்கின்றனர் தலைமை நீதிபதி வேதனை!
நம்பகத்தன்மையை சோதிக்கின்றனர் தலைமை நீதிபதி வேதனை!
ADDED : அக் 02, 2024 02:09 AM

புதுடில்லி, ''ஒரு குறிப்பிட்ட வழக்கை, பல்வேறு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் குறிப்பிட்டு உத்தரவு பெற முயற்சிக்கின்றனர். இதில், என் நம்பகத்தன்மையை சோதிக்கின்றனர்,'' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வேதனை தெரிவித்தார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு நேற்று தன் விசாரணையை துவக்கியது. அப்போது ஒரு வழக்கறிஞர், சுரங்க ஒப்பந்தம் குறித்த ஒரு வழக்கை குறிப்பிட்டார்.
இதற்கு தலைமை நீதிபதி கூறியதாவது:
இந்த வழக்கு தொடர்பாக, முந்தைய நாளிலும் மற்றொரு வழக்கறிஞர் குறிப்பிட்டார். இதுபோன்று தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட வழக்கை, வெவ்வேறு வழக்கறிஞர்கள் குறிப்பிட்டு, சில உத்தரவுகள் பெறும் முயற்சி நடக்கிறது.
இதுபோன்ற முயற்சிகளை ஊக்குவிக்க முடியாது. இவ்வாறு, ஒரே வழக்கை பல வழக்கறிஞர்கள் குறிப்பிடுவதை நிறுத்த வேண்டும். நீங்கள் உங்களுடைய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறீர்கள்.
தலைமை நீதிபதி என்ற நிலையில் எனக்குள்ள குறுகிய அதிகாரங்களை, உங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சிக்கிறீர்கள்.
இது, என் நம்பகத்தன்மையை சோதிப்பதாக அமைந்து விடுகிறது. நான் ஏதோ வழக்குகள் பட்டியலிடுவதை சரியாக செய்வதில்லை என்பதை காட்டுவதாக அமைந்து விடுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.