தாய்லாந்து - கம்போடியா மோதல்; எல்லையில் மீண்டும் பதற்றம்
தாய்லாந்து - கம்போடியா மோதல்; எல்லையில் மீண்டும் பதற்றம்
ADDED : டிச 09, 2025 05:41 AM

பாங்காக்: தாய்லாந்து - கம்போடியா எல்லைப்பகுதியில் நடந்த மோதலை அடுத்து, வான்வழி தாக்குதலை தாய்லாந்து துவங்கியுள்ளதால், எல்லையில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
தென் கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் இடையேயான எல்லை பிரச்னை நுாறாண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான எல்லை, பிரெஞ்சு காலனித்துவ ஆட்சியில், 1907ல் உருவாக்கப்பட்டது. ஆனால், இந்த வரைபடம் துல்லியமற்றது என தாய்லாந்து கூறி வருகிறது.
நிறுத்தி வைப்பு மேலும், 1,000 ஆண்டுகள் பழமையான பிரேயா விஹார் கோவில் அடங்கிய பகுதியை, 1962ல் சர்வதேச நீதிமன்றம் கம்போடியாவுக்கு வழங்கியது. இதனால் இன்றுவரை தாய்லாந்து கோபத்தில் உள்ளது.
நீண்ட காலமாக நீடித்த இந்த எல்லை பிரச்னை, ஜூலையில் மோதலாக வெடித்தது. ஐந்து நாட்கள் நீடித்த மோதலில், 10க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களும், பொதுமக்களும் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் முயற்சியால் இரு நாடுகளுக்கிடையே கடந்த அக்டோபரில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இருப்பினும், எல்லையில் பதற்றம் தொடர்ந்து நீடித்து வந்தது.
சமீபத்தில், தாய்லாந்து வீரர்கள் கண்ணி வெடியில் சிக்கி காயமடைந்ததை அடுத்து, அமைதி ஒப்பந்தத்தில் விரிசல் ஏற்பட்டது. அதிருப்தி அடைந்த தாய்லாந்து, அமைதி ஒப்பந்தத்தை காலவரையின்றி நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.
இந்நிலையில், தாய்லாந்து - கம்போடியா எல்லையில் நேற்று முன்தினம், 20 நிமிடங்கள் துப்பாக்கிச்சண்டை நடந்ததாக தாய்லாந்து ராணுவம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, தாய்லாந்து ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:
முதலில், கம்போடிய ராணுவத்தினர் தான் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் தாய்லாந்து வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்; எட்டு வீரர்கள் காயமடைந்தனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கம்போடியாவுக்கு பதிலடி கொடுக்க, அந்நாட்டின் ராணுவ இலக்குகளை குறிவைத்து வான்வழி தாக்குதலை நடத்தினோம். தாய்லாந்து குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே குண்டுகள் விழுந்தன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
அச்சுறுத்தல் கம்போடிய ராணுவ அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாலி சோச்சீட்டா கூறுகையில், “தாய்லாந்து ராணுவமே முதலில் தாக்குதலை நடத்தியது. பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளையும் அந்நாடு உடனடியாக நிறுத்த வேண்டும்,” என்றார்.
இதற்கிடையே, தாய்லாந்து ராணுவத்தின் தாக்குதலில் கம்போடியாவைச் சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும், ஒன்பது பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சர் நெத் பீக்த்ரா தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளும் மோதலை கைவிடும்படியும், அமைதியை பேணும்படியும் மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் கோரிக்கை விடுத்துள்ளார்.

