ADDED : அக் 15, 2024 12:12 AM
எப்படி இருந்த கட்சி!
சூரியன் கட்சி பெண் எம்.பி., தனது சொந்த பயணமாக சிலிகான் சிட்டியில் உள்ள சகோதரி வீட்டு விசேஷத்துக்கு வந்து போயிருந்தால், யாருக்கும் எந்த விமர்சனத்துக்கும் இடம் வந்திருக்காது. சொந்த கட்சிக்காரங்களுக்கு தெரியாமல், கை கட்சிக்காரர் நிகழ்ச்சியில் பங்கேற்றதால் தான் சூரிய தொண்டருங்க மனசு, 'பர்னிங்' ஆகியிருக்கு. இதை கட்சி தலைமை வரை கோல்ட் சிட்டிக்காரங்க புகார் செஞ்சிருக்காங்க.
சூரியன் கட்சி கர்நாடகாவிலும் இருக்கிறது என்பது, அவரின் ஞாபகத்துக்கு வரலையோ. 'மாஜி' சி.எம்., மகளான இந்த பெண் எம்.பி.,க்கு, கை கட்சி மீது இருக்கும் பாசம், சொந்த கட்சிக்காரங்க மீது இல்லாதது தான் வருத்தம் என்கிறாங்க. மந்திரி, எம்.பி., பதவியில் இருப்பவங்களுக்கு கட்சி கட்டுப்பாடு, ஒழுங்கு முறைகள் எதுவும் கிடையாதா. இதுக்காக இக்கட்சியில் புதுசா சட்ட திருத்தம் ஏதாச்சும் ஏற்படுத்திட்டாங்களா. கட்சியின் சீனியர்கள் என்று சொல்லிக் கொள்கிற பெரியவங்களும், 'எப்படி இருந்த கட்சி இப்படி ஆகிடுச்சேன்னு' மனம் உடைஞ்சு போயிட்டாங்களாம்.
-------அதிகாரம் யாரிடம்?
கை கட்சியில் கோளாறு நிறைந்த கோலாரு மாவட்டத்தில் சட்டை கிழிப்பு, நாற்காலிகள் உடைப்பு, அலேக்கா துாக்கி வெளியேற்றுவது, தள்ளுமுள்ளு எல்லாமே சகஜம் தான். ஆனா, அண்மையில் கட்சிக் கூட்டத்தில் கலாட்டா செய்த நான்கு பேரை மாவட்ட தலைவரு, 'சஸ்பெண்ட்' செய்திருக்காரு.
இவருக்கு, சஸ்பெண்ட் செய்ற அதிகாரமே கிடையாது. அது செல்லுபடி ஆகாதுன்னு கோலார் அசெம்பிளிக்காரர் அடிச்சு சொல்கிறார். ஏன்னா, கலாட்டா செய்ததே இவரோட ஆட்கள் தானே. அதனால கலாட்டா கம்பெனியை காப்பாற்ற, மாவட்ட தலைவருக்கு எதிராக அசெம்பிளிக்காரர் போர்க்கொடி துாக்கிட்டாரு. மாவட்டத் தலைவரை விட அசெம்பிளி காரருக்கு தான் மேலிடத்தில் மதிப்பாம். மாவட்ட கட்சி தலைவர் பதவி இன்னும் எத்தனை நாளைக்கு நீடிக்க போகுது என்ற, 'கவுன்ட் டவுன்' ஸ்டார்ட் ஆகியிருக்குதாம்.
மேல்முறையீடு ஏன்?
வருமானம் தரும் மைனிங் கல்யாண மண்டபம், 'மாஜி' மைனிங் ஆபீசர்கள் உட்பட சிலர் ஏற்படுத்தி கொண்ட டிரஸ்ட் வசம் இருந்தது. இதன் வருமானம், மைனிங் நிர்வாகத்துக்கு போய் சேராததால், அதை பறிக்க நிர்வாகத்தினர், நீதிமன்றத்துக்கு போனாங்க. கோர்ட்டும் மைனிங் நிர்வாகத்துக்கு சாதகமாக தீர்ப்பு சொல்லியிருக்காம். கல்யாண மண்டபத்தால், 20 வருஷம் ருசி கண்டவங்க விடவா போறாங்க. அவங்களும் மேல் முறையீடு செய்ய போறாங்களாம்.
அப்படியாவது இன்னும் சில ஆண்டுகள் தங்கள் வசமே நீடிக்க, காலம் கடத்தி சம்பாதிக்க திட்டம் போட்டிருக்காங்களோ. ஹைகோர்ட், சுப்ரீம் கோர்ட் வரை வழக்காட போறாங்ளாம். இந்த டிரஸ்ட் கூட்டம், மைனிங் தொழிலாளர் குடும்பங்களுக்கு 50 சதவீத கட்டண குறைப்பு செய்திருந்தால், அதன் பலனை அனுபவிச்சவங்க பரிதாபப்பட்டு சப்போர்ட்டுக்கு வந்திருப்பாங்க. ஆனால் நிர்வாக பொறுப்பில் ஒப்படைப்பதால் அவங்களாவது குறைந்த கட்டணம் வசூலிக்கட்டும் என்கிறாங்க பப்ளிக்.

