ADDED : டிச 15, 2024 10:54 PM
* ஊழல் பட்டாசு
முனிசி.,யில் ஊழல் நிறஞ்சி போச்சுன்னு சொன்னவர், எதிரணியை சேர்ந்தவர் இல்லை. இதை வேகமாக வெளிபடுத்தியவர் கைக்கார 'எக்ஸ்' தலைவரு.
நாம் கேட்க வேண்டியதை அவங்களே கேட்டு சந்தி சிரிக்க வைக்கிறாங்க. இவர் தலைவராக இருந்தப்போ ஒன்பது பெரிய ஆபீசர்களை டிரான்ஸ்பர் செய்ய வெச்சி, ஊழலே நடக்காமல் பார்த்துக் கொண்டாராம். அவர் பதவிக்காலம் முடிந்த பின் தான், ஊழல் மிதக்குதுன்னு பட்டாசை கொளுத்தி போட்டிருக்காரு.
ஊழலுக்கு வழி விடாமல் தடுத்ததால் தான், தனக்கு அடுத்த ரவுண்ட் தலைவர் பதவி கிடைக்க விடாமல் தடுத்ததாக, கோபத்துடன் சொல்லி இருக்காரு. இது அசெம்பிளிக்காரருக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவதாக வருத்தம் உண்டாகி இருக்காம். விரைவில் அந்த கட்சியே வேணாமுன்னு உதறிடவும் தயாராக இருக்காராம். தனக்கு ஒரு கண்ணு போனாலும் பரவாயில்லை, தன் எதிரிக்கு ரெண்டு கண்ணும் போக செய்யும் வேலை உள்ளுக்குள் நடக்குதாமே.
-----
* எங்கே மைதானம்?
கோல்டு சிட்டியில் விளையாட்டு துறைக்கென அரசு ஒதுக்கும் நிதியில் விளையாட்டு மைதானங்களை சீர்படுத்தலாமே. முனிசி., ஆபீஸ் எதிரில் இருக்கிற ஒரு ஸ்டேடியம் தவிர, வேறு ஒரு விளையாட்டு மைதானம் தேடினாலும் அகப்படல. ஆ.பேட்டை, உ.பேட்டையில் இளைஞர்களே இல்லையா. யாருக்குமே விளையாடும் ஆர்வமே இல்லையா.
ரா.பேட்டை கோர்ட் பக்கத்தில் இருக்கிற மைதானம் சீர்படுத்த யாருக்கும் மனசே இல்லையா. ஏற்கனவே மைன்ஸ் பகுதியில் பகுதி தோறும் இருந்த விளையாட்டு மைதானங்கள் ஒவ்வொன்றாக அழிந்து வருதே. இதுக்கு யார் உயிர் கொடுக்க போறாங்களோ. மாநில விளையாட்டுத் துறை மந்திரிக்கு கோல்டு சிட்டி தொகுதி இருப்பது தெரியுமா என்ற சந்தேகம் வந்திருக்கு.
-----
* உடன் பிறப்புக்கு மட்டுமே?
மண்வாரி தொழிற்சாலையில் தொழிலாளர் பிரச்னைகளுக்கு கூட்டமோ, போராட்டமோ, நுழைவாயிலில் இருந்து 50 மீட்டர் தொலைவில் நடத்திக்கலாமென கோர்ட்டு தீர்ப்பு வந்தாச்சு.
ஒப்பந்த தொழிலாளர்கள், போராட்டத்தை கைவிட்டு வேலைக்கு திரும்பியவர்கள், 30 நாட்கள் எந்தவித போராட்டமும் நடத்த மாட்டோம்னு எழுதி கொடுத்துட்டாங்க.
அப்படின்னா, 2025 ஜனவரி 2 வரைக்கும் 'நோ' போராட்டம். அதுக்குள்ளாக இவர்களுக்கு பணி நிரந்தரம் ஆகும்னு சிலரு எதிர்பார்க்குறாங்க. அப்படி நடந்தா சந்தோஷம்னு பலரும் நினைக்குறாங்க.
ஆனால் சில வீரர்களின் உடன்பிறப்புகளுக்கு வேலை நிச்சயம் செய்துக்க, ரகசியமா நிர்வாகத்திடம் பேச்சு நடத்தி வராங்களாமுன்னு பேக்டரி வட்டாரத்தில் காதும் காது வெச்சது போல் தகவல் தெரிவிக்குது.
------
* கையில் தடியுடன்...
தெரு நாய்கள் எக்கச்சக்கமா பெருகி வருது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தபாடில்லை. சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர், ஸ்லோ மோஷனில் கையில் தடியுடன் செல்கிற காட்சியை இங்கு தான் பார்க்க முடியும்.
நடந்து செல்றவங்க பயந்து நடுங்கி ஒடுங்கி தான் போகணும்னு விதியாக உள்ளது. தெரு நாய்களுக்கு இனப் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் முனிசி.,யின் திட்டம் ஒரு கண்துடைப்பு நாடகமாக இருக்குது. பெயரளவில், 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி இருக்கறதா, பட்டியல் காட்டுது. இதெல்லாம் யாரும் கண்டுக்க மாட்டாங்களா. இது ரொம்ப சின்ன அமவுண்ட் என்பதால், சமூக ஆர்வலர்கள் பார்வையில படலையா?
***

