ADDED : ஜன 27, 2025 10:07 PM
* நேதாஜியை மறப்பதா?
தேச விடுதலையின் மாவீரர், இந்திய தேசிய ராணுவத்தை ஏற்படுத்திய நேதாஜி என போற்றப்படுவரின் சிலையை முனிசி., அருகே உள்ள பூங்காவின் மையப் பகுதியில் நிறுவி இருக்காங்க. அந்த பூங்காவுக்கு நேதாஜி பெயரையே சூட்டி இருக்காங்க. அந்த பூங்காவின் பெயர் பலகை அழிந்து பல வருஷம் ஆனது. அதை மீண்டும் எழுதவே இல்லை.
கோடிக்கணக்கில் திட்டம் தீட்டுகிறவங்களுக்கு பெயர் பலகை எழுத நிதி நெருக்கடியா ஏற்பட போகுது. நேதாஜி பர்த் டே நேரத்திலாவது முனிசி.,க்கு சொந்தமான பூங்காவில் உள்ள அவரோட சிலைக்கு ஒரு சின்ன மாலை வாங்கி போடக் கூட முனிசி.,யில் பொதுக்குழு கூடி முடிவு செய்யணுமா. இல்லை முனிசி.,யில் என்ன அவ்வளவும் பெரிய பண கஷ்டமான்னு ஊர் மக்கள் கேட்குறாங்க.
---------
* தொழிற்பூங்கா வருமா?
தொழிற்பூங்கா உருவாக்குற திட்டத்துக்கு பெயர் பலகை வச்சிருக்காங்களே தவிர, மற்றபடி எந்த ஒரு சின்ன வேலையும் நடந்தாப்ல தெரியல. மாநில தொழில் மேம்பாட்டுத் துறை ஆபீசில் இன்னும் சல்லிக் காசும் நிதி ஒதுக்கல. 973 ஏக்கர் நிலத்தில் உருவாகும் தொழிற் பூங்கா பற்றிய பேச்சையே காணோம் என்கிறாங்க. இதன் உள் கட்டமைப்பு திட்டமான சாலை, குடிநீர், மின் வசதி உட்பட எந்த ஒரு திட்டத்திற்கும் நிதி ஒதுக்கினதா தெரியல.
-------
* முருகன் கோவில் தப்புமா?
செவ்வாய், வெள்ளிக் கிழமை மற்றும் கிருத்திகை தினங்களில் பக்தர்கள் குவியும், பொன்மலை முருகன் கோவில் இருக்கிற இடமும் கூட மண்வாரி பேக்டரியில் பயன்படுத்தாமல் தரிசாக கிடக்கிற இடமாம்.
தொழிற்பேட்டை அமைய உள்ள பட்டியலில் இந்த இடமும் இருக்குதாமே. ஆயினும், இங்கும் தொழிற்பூங்கா அமைய போகும் இடமென பெயர் பலகையை இதுவரை வைக்கல. 'அத்துமீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் எச்சரிக்கையை தெரிவிக்கல.
ஆயினும் தகவல் அறிந்த பக்தர்கள், கோவில் வளாகத்தில் பேக்டரி வராமல் தடுக்க போறாங்களாம். அதற்கான வேலைகளை கவனிக்க தொடங்கிட்டாங்க. வினை தீர்ப்பார் வேலவன் என்கின்றனர்.
-------
* பதவிக்கு கடும் போட்டி!
அமைச்சர் பதவி பெறும் முயற்சியில் கோலார் மாவட்டத்தில் 4 பேர் இருக்காங்க. இதில் ப.பேட்டை, கோல்டுசிட்டி தொகுதிக்காரங்க இருவருமே தமக்கு கிடைச்சிடும்னு நம்பிக்கையில் இருக்காங்களாம். மாவட்ட பொறுப்பு அமைச்சர் மீதுள்ள அதிருப்தியே இந்த பதவி பெறும் முயற்சியாம்.
ப.பேட்டைக்காரர், முதல்வரின் இல்லத்தை சுற்றி சுற்றி வலம் வருவதாக, நிழலாக பின் தொடர்பவர் உறுதிப்படுத்தி இருக்கிறார். கோல்டு சிட்டி பெண்மணியோ, தனது நைனா, டில்லி பவரை பயன்படுத்தி பெற்று தருவார் என நம்பி இருக்காராம்.
இந்த இருவர் இடையில், மாலுார்காரர் மனம் கொத்தும் பறவையாக வேலைகள் நடத்தி வருவதாகவும் தெரியுது. மாவட்டத்தில் உள்ள நால்வரில் ஒருவர் மட்டுமே, 'துணை முதல்வர்' குரூப். இவரோ, தனக்கு பதவி கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. மற்றவர்களுக்கு கிடைக்க கூடாதென இரண்டு எம்.எல்.சி.,க்களை வைத்து காய் நகர்த்தி வருகிறாராம். இதனால், தற்போதைய சி.எம்., பதவியில் இருக்கும் வரை கோலார்காரர்கள் அமைச்சர் ஆவது ரொம்ப கஷ்டமாம்.
***

