ADDED : செப் 22, 2024 11:27 PM
*கடைகள் திறப்பு எப்போ?
புல்லுசந்தை மார்க்கெட் பகுதியில் 100 கோடி ரூபாயில் அனைத்து வசதிகளுடன் புதிய மார்க்கெட் அமைக்க, ஒரு வருஷத்துக்கு முன்னாடி முனிசி.,யில் திட்டம் போட்டாங்க. ஆனா, எதுவம் நடக்கல.
திடீரென அசெம்பிளிக்காரரு நேத்து வந்தாரு. இரண்டு அடுக்கு மாடி வணிக வளாகத்தை கட்டுவதாக, முன்பு, சொன்னதையே சொன்னாங்க.
எப்போ கட்டப்படும். இந்த கடைகளை, எம்.ஜி., மார்க்கெட்டில் கடை நடத்துவோருக்கு தருவாங்களா அல்லது புதுசா டெண்டர் விட்டு, கடைகளை வழங்குவாங்களான்னு தெரியவில்லை.
ஏற்கனவே மாட்டு வண்டி ஸ்டாண்டில், வணிக வளாகம் கட்டப் பட்டு, பல ஆண்டா மூடியே கிடக்குது. இது பற்றி பேச்சும் இல்ல; மூச்சும் இல்ல. பஸ் நிலையம் வடக்கு பகுதியில் 30 கடைகளும், தெற்கு பகுதியில் 19 கடைகளும் கட்டப்பட்டு யாருக்கும் கொடுக்காமல், பூட்டியே வெச்சிருக்காங்க.
இப்படி அரசுப் பணத்தை பாழாக்கலாமான்னு யாரும் யோசிச்ச மாதிரி தெரியல. இப்போது புதுசா அடுக்கு மாடி மார்க்கெட் கட்டப் போறாங்களாம். இதுக்கு 200 கோடி ரூபாயில் கட்டடம் கட்ட போறாங்கன்னு சொல்றாங்க. முனிசி.,க்கு வருமானம் வருமா அல்லது இதனையும் ஜனங்க வேடிக்கை பார்க்கணுமா.
காணாமல் போன ஏரி திட்டம்
பத்து வருஷத்துக்கு முன்னாடி, லட்சுமி சாகர் ஏரியை சீரமைக்க 9 கோடியில் திட்டமிட்டாங்க. இங்கு 5 முதல் 6 செ.மீ., மழை பெய்தாலே, 200 ஏக்கர் கொண்ட ஏரி நிரம்பிடுமாம். தங்க நகர் முழுமைக்கும் குடிநீர் வழங்கலாமென 2013ல் திட்டமிட்டாங்க.
அப்போதைய சிறிய நீர் வளத்துறை அமைச்சருடன், செங்கோட்டைக்காரரான, தற்போதைய ஸ்டேட் உணவுத் துறை மந்திரியும் வந்து ஆய்வு செஞ்சாங்க. இதுநாள் வரை, இப்படியொரு திட்டம் இருந்ததையே இவங்க மறந்துட்டாங்களே.
இப்போதாவது கோல்டன் சிட்டி நகருக்கு குடிநீர் திட்டம் உருவாகுமா அல்லது அறிவிப்போட கதை முடிஞ்சிடுமா.
கோல்டு சிட்டிக்கு எரகோள் திட்டம் வரும்ன்னு இழுத்தார். இன்னும் வந்தபாடில்லையே.
தலைவர் இல்லாமலா?
முனிசி.,யில் தலைவர், துணைத் தலைவர் பதவியில் தேர்வான வங்க இருக்காங்களா இல்லையா.
முனிசி., பெரிய ஆபிசர்களுடன் அசெம்பிளிகாரர் மார்க்கெட் விசிட் செய்தாரு. புதுசா கட்டுமான திட்டங்கள் பற்றி பேசினாரு. இவருடன் நகர தலைவர் மேடம் வரலயே. இதனால, நகர மக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுருக்குது.
தொகுதி வளர்ச்சிக்கு எம்.பி., - எம்.எல்.ஏ., நிதியில் திட்டங்கள் உருவாவதாக இருந்தாலும், முனிசி., தலைவர் இல்லாம செய்ய முடியுமா.
அசெம்பிளிகாரருடன் 'மாஜி' தலைவரு தான் இருந்தாரு. தற்போதும் அவரே
தலைவராக செயல்படுறாரோ. இவர்களுக்காக முனிசி.,யின் பெரிய ஆபிசரு தலையாட்டுறாரு. அவரது நாற்காலிக்கு ஆபத்தே இல்லையாம்.
மேடம் ஆப்சென்ட்!
கோலார் மாவட்டத்தில் 3 மாதத்துக்கு ஒருமுறை, மாநில வளர்ச்சி திட்ட கூட்டம் நடப்பது வழக்கம். இங்குள்ள 6 தொகுதிகளின் பிரச்னைகளையும் அலசுவாங்க. தேவையான நடவடிக்கை எடுப்பாங்க.
சமீபத்தில் நடந்த இந்த கூட்டத்தில் கோல்டு சிட்டி அசெம்பிளி காரர் ஆப்சென்ட். கோல்டு சிட்டியில், தலைநகரின் குப்பைகள் கொட்டும் திட்டம்; ஒரே தொகுதியில் வீடில்லாத 30 ஆயிரம் பேரின் பிரச்னை; திறப்புக்கு காத்திருக்கும் இ.உணவகம் போன்றவை பற்றி விரைந்து கவனிக்க வேண்டிய தருணத்தை 'மிஸ்' செய்துட்டாங்க.
கோலாரில் நடத்தப்படும் இக்கூட்டத்தை அடுத்து, கோல்டு சிட்டியில் கூட்ட வேண்டும். அப்போது தான் இங்குள்ள பிரச்னைகள் மாவட்ட பொறுப்பு அமைச்சர், கலெக்டர் கவனத்துக்கு தெரியும்னு விபரம் அறிந்தவங்க சொல்றாங்க.