ராமர் கோவில் கட்டும் பணியில் தங்கவயல் விஞ்ஞானிகள் பங்களிப்பு
ராமர் கோவில் கட்டும் பணியில் தங்கவயல் விஞ்ஞானிகள் பங்களிப்பு
ADDED : ஜன 21, 2024 12:32 AM

தங்கவயல், : அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப் பணியில் பங்கு கொண்டு தங்கவயல் விஞ்ஞானிகளும் பெருமை சேர்த்துள்ளனர்.
அயோத்தியில் பிரமாண்டமான முறையில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. நாளை ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளதால், இந்த தருணத்திற்காக உலக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ராமர் கோவில் கருவறையில், கர்நாடக மாநிலம், மைசூரை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் வடிவமைத்த விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
இதேபோன்று, தங்கவயலுக்கும் மகுடம் கிடைத்துள்ளது. ஆம், கோவிலின் கட்டுமானப்பணி உருவாக அடிப்படை தேவைக்கான தகுதி வாய்ந்த பளிங்கு கற்களின் சோதனையை மேற்கொள்ளும் வாய்ப்பு தங்கவயல் நகருக்கு கிடைத்துள்ளது.
கோலார் மாவட்டம், தங்கவயலின் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ராக் மெக்கானிஷம் என்ற என்.ஐ.ஆர்.எம்., எனும் தேசிய பாறைகள் ஆய்வுக் கழக மூத்த விஞ்ஞானிகள் தான், அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு தேவையான பளிங்கு கற்களை ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கியது என்பது தெரிய வந்துள்ளது.
அடித்தளம் முதல், கோபுரம் வரை இவர்கள் பரிசீலித்து ஒப்புதல் அளித்த கற்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன.
இது வரலாற்று பெருமைக்குரிய கோவில் என்பதால், 16 விதமான கற்கள் வரவழைக்கப்பட்டன.
கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து, மார்பிள், கிரானைட் உள்ளிட்ட கற்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இவற்றை, என்.ஐ.ஆர்.எம்., இயக்குனர் ராஜன் பாபு தலைமையிலான விஞ்ஞானிகள் ஆய்வு செய்து, கோவில் கட்டுவதற்கு தகுதியானவை என்று சான்று அளித்த கற்களே கோவில் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.
பண்டைய 'இன்டர் லாக்கிங் சிஸ்டம்' முறையில் கோவிலை கட்டி எழுப்பியுள்ளனர்.
இதனால் மழை, இடி, மின்னல், புயல், வெயில், பூகம்பம் ஏற்பட்டாலும் பாதிப்பு ஏற்படாது என்பதை இதே விஞ்ஞானிகள் சோதனை மூலம் உறுதி செய்துள்ளனர்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும்பணியில் ஈடுபட்டது, எனக்கு புதிய அனுபவத்தை கொடுத்துள்ளது. ராமருக்கு சேவை செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது மகிழ்ச்சியை அளிக்கிறது.
ராஜன் பாபு,
முதன்மை விஞ்ஞானி மற்றும் இயக்குனர்,
என்.ஐ.ஆர்.எம்., தங்கவயல்

