ADDED : செப் 19, 2024 11:01 PM
கேட்பதில் தயக்கம் ஏன்?
நகர பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்குறாங்களே, சுரங்க குடியிருப்பு பகுதிகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட கோவில்கள் இருப்பது, தொகுதி அசெம்பிளி மேடம் கவனத்திற்கு வருவதாக தெரியலையே.
சி.எம்., சிறப்பு நிதி 4 கோடியில், ராஜ கோபுரம் கட்ட 70 சதவீதம் ஒதுக்கியாச்சாம். மீதமுள்ள 30 சதவீத தொகையில், 20 லட்சம் ரூபாயை, ஒரு கோவிலுக்கு அறிவிச்சாங்க. இன்னும் மீதி இருக்கிற தொகையில், உ.பேட்டையின் பழமைவாய்ந்த கோவிலை சீரமைக்க போறாங்களாம். இதெல்லாமே நகர பகுதி கோவில்கள்.
ஆனால், சுரங்க குடியிருப்பு பகுதியில் இருக்கும் கோவில்களை சீரமைக்கணுமுன்னு எதிர்ப்பாக்குறாங்க. இதுக்காக அசெம்பிளி மேடத்திடம் சிபாரிசு செய்ய கை காரங்க ஏன் தயங்குறாங்களோ?
சல்லிக்காசும் வேண்டாம்!
அரசியல்வாதி ஒருத்தரின் தலையில் கிரீடம், ஆளுயர மாலை சூட்டினாங்க. அவர் கொடுத்த டொனேஷன் மூலம் தான், கோல்டு மைன்ஸ் தொழிலாளர் வழக்கு வெற்றி பெற முடிந்ததென, ஊரையே பேச வெச்சாங்க.
அரசியலே வேணாம்னு தானே தனித்து இயங்க, சங்கத்தை ஏற்படுத்தினாங்க. ஆனால், ஏன் அந்த அரசியல்வாதியிடம் கையை நீட்டணும். அவரை ஏன் தலையில் துாக்கி வெச்சு ஆடணுமுன்னு பல தரப்பில் பேச்சு ஓடினது.
அரசியல்வாதிக்கு பிரசார பீரங்கியா வேலை பார்த்தவங்களை ஒதுக்கி வைக்க முடிவு செய்திட்டாங்களாம். நிர்வாகம் மேல் முறையீடு செய்ததை எதிர்க்க, சல்லி காசும் யாரிடமும் வாங்க வேணாம்னு வக்கீல் சொல்லிட்டாராம். ஏற்கனவே அவரே கோல்டு மைன்ஸ் பெரிய ஆபீசரா இருந்தவராச்சே; அவருக்கு யார் எப்படின்னு தெரியாமலா போயிருக்கும்.
மொத்தமா வித்துட்டாங்களா?
சயனைடு மலை மீது செக்யூரிட்டி போட்டாச்சு. அதனை சுற்றி பார்க்க முடியாதபடி தடுத்துட்டாங்க. 100 ஆண்டுக்கும் அதிகமாக திறந்த வெளியில் கேட்பாரற்று கிடந்த, இந்த செயற்கை மலைக்கு இப்போது தனி மவுசு கூடியிருக்கு.
பல ஆயிரம் கோடிக்கு, உள்ளுக்குள் வியாபாரம் நடக்குதாம். எப்படியோ, செயற்கை மலையை பெயர்த்து துாக்கிட்டு போக கிரேன்களுக்கும், புல்டோசர்களுக்கும் வேலை கொடுக்க போறாங்களாம்.
இதுக்கு டெண்டர் விடப்போறாங்களா அல்லது டெண்டர் விட்டு வித்துட்டாங்களா. எத்தனை 'சி'க்கு முடிவாச்சு. யார் டெண்டர் எடுத்தது. எதுக்கு இந்த செயற்கை மலைக்கு 'டைட் செக்யூரிட்டி'ன்னு மைனிங் பகுதியில பேச்சு ஓடிட்டிருக்குது.
அப்படி என்ன வெறுப்போ?
அரசு பள்ளிங்க சிதிலமடைந்து, யாரை பழிவாங்க போகுதோன்னு பாடம் நடத்துற வாத்தியாருங்க, மாணவருங்க அச்சத்தில் இருக்காங்க. இதை மாவட்ட கல்வித்துறை பெரிய ஆபீசர், கலெக்டர் நேரில் வந்து பார்வையிட மாட்டாங்களான்னு வட்டார துறையில் ரீல் ஓடுது.
மாவட்ட பொறுப்பு மந்திரின்னு ஒருத்தரை நியமிச்சி இருக்காங்க. இதில் கோல்டு சிட்டி என, மாவட்டத்தில் ஒரு தொகுதி இருப்பது, அவரது கவனத்துக்கு வந்ததா தெரியல.
இவரு ஒருமுறை வந்தாரு. அதுவும் பெரிய தேர்தல்ல ஓட்டுக் கேட்க மட்டுமே. மற்றபடி வரவே இல்லையென கை காரங்க வருந்துறாங்க. கோல்டு சிட்டி கூட, உங்க மாவட்ட பொறுப்பு தான்னு ஞாபகப்படுத்த வேண்டுமா; கோல்டு சிட்டி மீது அப்படி என்ன வெறுப்போ?