கஷ்டம் தெரியலை!
ப.பேட்டையில் இருந்து தங்கமான நகருக்கு பஸ் வசதிக்காக தினமும் அல்லல்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. தனியார் பஸ்கள் நிறுத்த இடமும் இல்லை. இதனால் நடை பாதையில் தான் வெயில் மழை, பனி, காற்று என எல்லா நேரங்களிலும் அல்லல்படுவது வழக்கமா போச்சு.
அரசு பஸ்களும் நேரத்திற்கு கிடைப்பது இல்லை. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்ல முடியவில்லை. பஸ் வசதி கேட்டு அவர்கள் போராட்டமும் நடத்தினாங்க. எந்த பிரயோஜனமும் இல்லையாம். இதுக்கெல்லாம் போக்குவரத்து துறையின் அலட்சியமே காரணம்னு சொல்றாங்க.
லோக்கல் அசெம்பிளிக்காரர், செங்கோட்டைக்காரர் ஆகியோருக்கு, ஜனங்க படும் கஷ்டம் புரிய மாட்டேங்குது. ஏன்னா அவர்கள் காரில் பயணிப்பதால் அலட்சியம் காட்டுறாங்க.
ப. பேட்டையில் பஸ் டிப்போ இல்லை. பஸ்கள் எத்தனை தான் இயக்கு கிறது என தெரிய வில்லை. பஸ் வந்து போகும் நேரம் பற்றி அறிவிப்பும் இல்லை. போக்குவரத்து துறையின் செயல்பாடு மீது மக்களுக்கு வெறுப்பு ஜாஸ்தியா இருக்குது.
தீராத வீடு பிரச்னை!
வீடு இல்லாதவர்களுக்கு வீடு. நிலம் இல்லாதவர்களுக்கு தலா 2 ஏக்கர் நிலம் வழங்க அரசில் திட்டம் இருக்குது. இந்த திட்டம் எல்லா மாவட்டங்களிலும், எல்லா தாலுகாவிலும் அமலில் இருக்குது. ஆனால், கோல்டு சிட்டி மைன்ஸ்காரர்களுக்கு மட்டும் இந்த திட்டமெல்லாம் கிடைச்ச பாடில்லையே. கோல்டு சிட்டி காரர்களை எதுக்கு ஒதுக்கி வைக்குறாங்களோ?
மைன்ஸ் பகுதியில் குடியிருக்கும் வீடுகளை சொந்தம் ஆக்க, தீர்ப்பு வந்து 10 வருஷம் கடந்தும் கூட தீர்ப்புக்கு மதிப்பளிக்கலையே. தேர்தல் வர உள்ளதால், தாமரைக்காரங்க பொசிஷன் சர்ட்டிபிகேட் கொடுப்பதையே சாதனையா டமாரம் அடிக்கிறாங்க. இதுக்கு எதிர்ப்பு கிளம்பினதால் அதையும் வழங்காமல் நிறுத்திட்டாங்க. வீடு பிரச்னை தீர இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்கணுமோ?
ஆக்கிரமிப்பு அதிகரிப்பு!
கோல்டு சிட்டியில் 200 ஏரிகள் இருந்ததா கணக்கு சொல்றாங்க. இப்போ அதில் எத்தனை ஏரி தான் மிச்சம் இருக்குதோ தெரியல. பல ஏரிகளை காணவில்லை. எல்லாம் ஆக்கிரமிப்பாளர்களின் வசமாகி விட்டது. போலி பட்டா தயாரித்து விற்பனை நடந்திருக்கு.
ஆக்கிரமிப்புகளை அகற்ற முறையான நடவடிக்கை எடுக்க ஆபீசர்களுக்கு துணிச்சல் இல்லை. எல்லா முறைகேடுகளுக்கும் ஆபீசர்களே உடந்தையாக செயல் பட்டதாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கோவில் நிலமும், ஏரி நிலமும் மட்டுமல்ல, சுடுகாடு நிலத்தையும் விட்டு வைக்காமல் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை மீட்க அரசு இன்னும் தயக்கம் காட்டலாமா என்ற கேள்விகள் எழுந்திருக்கு.

