இந்தியா மீதான வரி குறைப்பு: டிரம்புக்கு பிரதமர் மோடி நன்றி
இந்தியா மீதான வரி குறைப்பு: டிரம்புக்கு பிரதமர் மோடி நன்றி
UPDATED : பிப் 03, 2026 11:30 AM
ADDED : பிப் 03, 2026 06:48 AM

புதுடில்லி: ''இந்தியா - அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் இறுதியாகியுள்ளது. எனவே, இந்திய இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட பரஸ்பர கூடுதல் வரி 25 சதவீதத்தை, 18 சதவீதமாக குறைக்கிறோம்,'' என அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று நம் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசி வாயிலாக இருதரப்பு வர்த்தகம் குறித்து பேசினார்.
இதை தொடர்ந்து, அதிபர் டிரம்ப் கூறியதாவது:
பிரதமர் மோடி மீதான நட்பு மற்றும் மரியாதை காரணமாக இந்தியா மீது விதிக்கப்பட்ட 25 சதவீத கூடுதல் வரியை, 18 சதவீதமாக குறைக்க முடிவு செய்துள்ளேன். இந்தியா - அமெரிக்கா இடையே இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தமும் இறுதியாகியுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தவும் பிரதமர் மோடி ஒப்புக் கொண்டார்.
மேலும், அமெரிக்காவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்குவதாக உறுதி அளித்துள்ளார். இதன் மூலம் உக்ரைன் போர் முடிவுக்கு வர பிரதமர் மோடி உதவியுள்ளார்.
அமெரிக்கப் பொருட்கள் மீதான வரியையும், வரியில்லாத தடைகளையும் பூஜ்ஜியமாக்க இந்தியா நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
டிரம்புக்கு ஆதரவு இந்திய இறக்குமதி மீது வரியை குறைத்ததற்காக பிரதமர் மோடி கூறியதாவது:
என் அன்பு நண்பர் டிரம்புடன் பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது. இனி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள், அமெரிக்காவில் குறைக்கப்பட்ட 18 சதவீத வரியுடன் கிடைக்கும் என்பது உற்சாகத்தை தருகிறது. 140 கோடி இந்திய மக்கள் சார்பில், அவருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இரு பெரும் பொருளாதார மற்றும் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளான அமெரிக்காவும், இந்தியாவும் ஒன்றாக இணைவது, மக்களுக்கு பெரும் பலன் தரும். இரு தரப்பு கூட்டுறவு, அபரிமிதமான வாய்ப்புகளை உருவாக்கும்.
உலகளாவிய அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு அதிபர் டிரம்பின் தலைமை முக்கிய பங்கு வகித்து வருகிறது. அமைதிக்காக அவர் எடுத்து வரும் முயற்சிகளுக்கு, இந்தியா முழு ஆதரவு அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

